மங்கல் பாண்டே
நான்கு வருட இடைவேளைக்குப் பிறகு, நாடெங்கும் கொண்டாடப்படும் இந்தி நடிகர் நடிக்கும் படம். இரண்டு வருட உழைப்பு. 100 கோடி செலவு. விடுதலைக்கு ஏற்பட்ட முதல் எழுச்சிக்கு காரணமானவனின் கதை. அதிசயமாக படம் வெளியான இரண்டாவது நாளான இன்று, பெங்களூரின் திரையரங்கம் ஒன்றில் இரவு வேளை காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது. நாளை சுதந்திர தினம். சுதந்திரத்தைக் கொண்டாட ஒரு இந்திய சுதந்திர வரலாற்று படம். இந்தி தெரியாத என் பெற்றோரையும், இந்தி தெரிந்த நானும் என் தம்பியும், “இந்தி தெரியாது, ஆனால் புரியும்” என்று சொல்லும் எங்கள் நண்பருமாக ஐவராக படம் பார்க்க சென்றோம்.
“மங்கல், மங்கல்” என்று மங்கலம் பாடி படம் முடிந்துவிட்டது. படத்தில் ஒரு சில காட்சிகளைத் தவிர என் பெற்றோர்களுக்கு மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வரலாற்றுப் பாடத்தில் படித்ததுதான் படத்தின் கதை. “தன் மதக்கோட்பாடு மீறப்பட்ட காரணத்தினாலே தான், மங்கல் பாண்டே எதிர்த்தான், விடுதலைக்கு இல்லையே? அவனையேன் விடுதலை வீரன் என்கிறீர்கள்?” என்று என் வரலாற்று ஆசிரியரிடம் கேட்ட அறிவாளி(!) மாணவன் நான். என்னுடைய வரலாற்று ஆசிரியர் கேள்விக்கு சரியாக பதிலளிக்கவில்லை. படத்தின் முடிவுக் காட்சியில் இறப்பதற்கு முன்னால் “நான் விலங்கு கொழுப்பு பயன்பாட்டுக்காக தான் எதிர்க்கத் தொடங்கினாலும், இன்று நான் விடுதலைக்காக தான் எதிர்த்து நிற்கிறேன், மதக் கோட்பாடு மீறலுக்காக இல்லை!” என்று அமீர்கான் உணர்ச்சிப் பொங்க சொல்கிறார். இருந்தாலும் என் கேள்விக்கு சரியாக பதில் கிடைத்ததாக தெரியவில்லை என்றேன், வெளியே வந்தவுடன்.
“வரலாற்று படம், தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் படம் எடுத்திருக்கிறார்கள். வரலாற்று படத்தில் நிரம்பவும் கதை அளக்கவும் முடியாதே” என்றார் எங்கள் நண்பர். வேறு யாராவது விடுதலை வீரரின் கதை எடுத்திருக்கலாமே, இப்படி திரைக்கதையில் சம்பவங்கள் இன்றி தவித்திருக்க வேண்டாம், இராணி முகர்ஜியையும் அளவெடுத்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. இருந்தாலும் விளம்பரப் படுத்திய வகையைப் பார்த்து, விடுதலை வேட்கையை படம் சித்தரிக்கும் என்று எதிர்பார்த்து போனவன் நான். ஒரு காட்சியிலாவது உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியுடன் கூடிய “ஒரு புல்லரிப்பு, ஒரு மின் அலை”ஏற்படும் என்று காத்திருந்தேன். ஏற்படாதது ஏமாற்றம் தான் என்றேன். “நீங்கள் ஏன் இதை விமர்சனமாக உங்கள் வலைப்பதிவில் எழுதக் கூடாது?” என்றார் எங்கள் நண்பர். விமர்சனம் செய்யும் அளவுக்கு கருத்து சொல்கிறேன் என்று ஆங்கில, தமிழ் ‘இலக்கியப் பேரார்வம்’ கொண்ட மெத்தப் படித்த எங்கள் நண்பர் கூறியதை எண்ணி உள்ளூர இன்புற்றாலும், “நான் என் வலைப் பதிவில் சிறுகதை, குறுங்கதை, பெருங்கதை, வசனக்கவிதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை மற்றும் என் ஏனைய இலக்கிய படைப்புகளே(!) வெளியிடுவதாக ஒரு கோட்பாடு வைத்துள்ளேன்” என்றேன், என் தம்பிக்கு நக்கல் சிரிப்பு ஏற்படுத்தியவாறே.
வீடு திரும்பினோம். இந்தியா விடுதலை பெற்று முப்பது வருடங்கள் கழித்துப் பிறந்தவன் நான். விடுதலை என்றால் என்ன, வேட்கை என்றால் என்ன? அதற்கான போராட்டம் என்றால் என்ன? என்று நான் வரலாற்று புத்தகங்கள் மூலமும், அந்த காலத்து தூர்தர்ஷனில் அடிக்கடி ஒளிபரப்பிய சுதந்திரம் தொடர்பான கறுப்பு வெள்ளை படங்களின் மூலம் ஒரளவு புரிந்து கொண்ட காலங்கள் நினைவுக்கு வந்தது. இன்று சுதந்திர காலத்துக் கதைகள் திரைப்படத்தில் வருவதே அபூர்வம். தூர்தர்ஷன் இன்னமும் பழைய சுதந்திர கறுப்பு வெள்ளை படங்கள் காண்பித்தாலும், ‘உலகத் தொலைக்காட்சியின் முதன்முறை’ படங்களைப் பார்க்காமல் யார் அதை பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. இந்த படம் இன்றைய இளைய மாணவ சமுதாயத்தில் என்ன பாதிப்பும், சுதந்திரத்தைப் பற்றி என்ன அர்த்தம் கொடுக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். “சினிமா படம் பார்ப்பது தவறல்ல, படங்களிலிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், அதை பின்பற்ற வேண்டும்” என்று எனது பள்ளி ஆசிரியர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. இந்த படத்தில் இருந்து இளைய சமுதாயத்தினர் என்ன கற்றுக் கொள்ளப் போகிறார்கள், பின்பற்றக்கூடிய விஷயம் எது??…. அது தான் அன்றைய தினத்தின் கடைசி சிந்தனையாக இருந்தது. கடினமான கேள்வியா என்று தெரியவில்லை, ஏனோ இந்த கேள்விக்கு பதில் கிடைப்பதற்கு முன் தூங்கிவிட்டேன்.
அதிகாலையில் எழுந்துவிட்டேன். அம்மாவுக்கு ஆச்சரியம். முடித் திருத்தகத்துக்கு சென்றேன். நல்ல வேளை, அங்கிருந்த தொலைக்காட்சியில் பிரதமர் கொடியேற்றி முடித்துவிட்டார். முடி வெட்டும் போது கொடியேற்றினால் முடி திருத்தகரைக் கடுப்பேற்றும் விதமாக எழுந்து நிற்பதா, அல்லது ஒரக்கண்ணால் அந்த காட்சியைப் பார்ப்பதா என்ற குழப்பம் இருந்திருக்கும். இப்போது குழப்பமும் இல்லை, அவ்வளவு கூட்டமும் இல்லை. எனக்குப் பிறகு ஒரு சிறுவனும் அவனது தந்தையும் வந்தனர். எனக்கு முடி வெட்டும் வேளை உடனே வந்தது. தொலைக்காட்சியில் சுதந்திர தினத்தின் இராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது.
நெற்றியின் மேல் இருந்த முடியை வெட்ட ஆரம்பித்த போது பாதுகாப்பாகக் கண்களை மூடிக்கொண்டேன். அப்போது அந்த சிறுவன் அவன் தந்தையிடம் சொன்னதைக் கேட்டேன். நான் பார்த்த படம் இளைய சமுதாயத்தின் ஏற்படுத்திய பாதிப்பு புரிந்தது. மங்கல் பாண்டே என்ற சுதந்திர வீரனின் படத்திலிருந்து என்ன பின்பற்றப் போகிறார்கள் என்ற என் நேற்றைய கடைசி கேள்விக்கு பதில் கிடைத்தது. அப்படியே கண்களை திறந்துவிட்டேன். முடி கண்ணில் விழுந்தது. சிறுவன் கூறியதை நினைவு கூர்ந்தேன்.
தந்தை மகனிடம் “எப்படிடா வெட்ட, என்ன மாதிரி கட் வேணும்?” என்றார்.
“படத்துல மங்கல் பாண்டேவோட ஹேர் ஷ்டைல் சூப்பர்பா. அந்த மாதிரி ஹேர் கட் வேணும்பா!” என்றான்.
கலங்கிய கண்களுடன் (ஆம், முடி விழுந்ததனால்) அந்த சிறுவனைப் பார்த்தேன். முடி குறைவாகத்தான் இருந்தது.
-வினோத்
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. Your votes and comments are precious.
1 Comments:
// “படத்துல மங்கல் பாண்டேவோட ஹேர் ஷ்டைல் சூப்பர்பா. அந்த மாதிரி ஹேர் கட் வேணும்பா!” என்றான். //
படத்திலிருந்து பின்பற்றக்கூடிய ஒரே விஷயம் ஆமீர் கானோட ஹேர் ஸ்டைல் மட்டும் தான்னு சொல்றீங்களா :) ?
Post a Comment
<< Home