காக்காவுக்கு தலை சுற்றுமா?
கோயிலில் தீபாராதனை ஆரம்பித்துவிட்டது. ஏனோ அங்கே ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை அணைத்துவிட்டார்கள். மின்விசிறியின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது. கோயிலின் மேற்கூரைகளில் அமர்ந்திருந்த காகம் ஒன்று மின் விசிறியின் இறக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டது. இப்போது காகமும் குறைந்து கொண்டிருந்த மின் விசிறி இறக்கையின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.
“காக்காவுக்கு தலை சுற்றாதா?” என்றாள் பிரியா.
“என்னது???”
“காக்காவுக்கு தலை சுற்றாதா?” என்று மின்விசிறி காகத்தைக் கைகாட்டினாள்.
“ரொம்ப முக்கியம்!” என்று கூறுவது போல் என்மீது பார்வை செலுத்திவிட்டு, “அங்க இங்க சுத்தி பார்க்காம, சாமி தீபாரதனையைப் பாரு பிரியா.” என்றாள் அவளது அம்மா.
“அப்பா, நீங்க சொல்லுங்கப்பா, காக்காவுக்கு தலை சுற்றாதா?”
என்னால் அவளது அம்மா அளித்த பதிலை அளிக்க முடியவில்லை.
“கேள்விகள் கேள், அப்போது தான் நிறைய தெரிந்து கொள்வாய், புரிந்து கொள்வாய்” என்று தினம் தினம் பிரியாவுக்கு அறிவுரை வழங்குபவன் நான்.
“கேள்வி கேட்டால் தான் அறிவியல் சிந்தனை வளரும்னு சொல்லிட்டு இருப்பீங்களே, பதில் சொல்லுங்க” என்று சந்தடி சாக்கில் என்னை மாட்டிவிட்டாள் என் அருமை மனைவி.
முடிந்த அளவு நான் எந்த கேள்விக்கும் ஒரு அறிவியல் சார்ந்த பதிலைத் தரவே முயற்சிப்பேன். உயர்நிலை இயற்பியல் ஆசிரியராக இருந்து கொண்டு எதாவது அர்த்தமற்ற பதில்களைத் தந்தால் நன்றாக இருக்காதல்லவா? ஆனால் “காக்காவுக்கு தலை சுற்றுமா சுற்றாதா” என்ற கேள்விக்கு உண்மையில் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடைய அறிவியல் அனுபவத்தில் உலகில் கிட்டதட்ட எல்லா விஷயங்களுக்கும் எதாவது ஆய்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் “காக்காவுக்கு தலை சுற்றுவதைப்” பற்றி இதுவரை யாரும் ஆய்வு செய்து கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. பிரியாவைத் தவிர உலகில் வேறு யாருக்கும் இந்த விஷயம் முக்கியமானதாய் படவில்லை போலும். தவிர உலகில் எத்தனை இடங்களில் காக்கைகள் மின்விசிறியில் வந்து உட்காரப் போகிறது(அதுவும் மின்விசிறி ஓடும் போது உட்கார முடியாது, நிற்கும் போது உட்காரக்கூடாது, சுற்றுவதற்கு சரியாக அணைக்கப்பட்டவுடன் வந்து அமர வேண்டும்!), அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு?
இந்த கேள்வியின் பதில் மூலம் ஒன்றும் பெரிதாக அவள் தெரிந்து கொள்ளப் போவதில்லை. எதாவது பதில் சொல்வோமென்று,
“சுற்றாது” என்று பதில் சொன்னேன்.
“எப்படிப்பா உங்களுக்குத் தெரியும்?” என்றாள்.
இந்த கேள்வியையும் நான் எதிர்பார்க்கவில்லை.
“அதோட மூளையோட அமைப்பு அப்படிமா. நம்ம மாதிரி கிடையாது. சுத்தினாலும் மயக்கம் வராது.”
“எப்படிப்பா உங்களுக்குத் தெரியும்?”
மறுபடியும் என் பதில் மீது நம்பிக்கை இல்லை. நான் இந்த பேச்சை நிறுத்தப் பார்க்கிறேன். இவள் விடுவதாக இல்லை.
“போன ஜென்மத்தில நான் காக்காவா இருந்தேன். அதனால் எனக்குத் தெரியும்.”
“அப்ப நீங்களும் போய் இந்த மாதிரி Fanல உட்கார்ந்தீங்களாப்பா?”
நான் மின்விசிறி மீது அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து பார்த்தேன். ரசிக்கும்படியாக இல்லை. இருந்தாலும், “ஆமாம். உட்கார்ந்தேன்“ என்றேன்.
“உட்காருவதுக்கு முன்னாடியே தலை சுத்தாதுனு உங்களுக்குத் தெரியுமாப்பா?”
ஒன்று மட்டும் புரிந்தது. நான் இவளை கேள்வி கேட்க ஊக்கப்படுத்தியதில் இவளது கேள்வி கேட்கும் திறமை நம்பமுடியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
“ஏதோ போய் உட்கார்ந்தேன், நல்ல வேளை ஒன்னும் ஆகலை.”
“ஆனால் ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, அதை பண்ணக்கூடாதுனு சொல்லுவீங்களேப்பா?”
போன பிறவியில் நடந்த தவறுக்கு இப்போது குறுக்கு விசாரணை நடப்பது போல் உணர்ந்தேன். என்றோ அவளிடம் நான் இதே போன்று சில கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தியதும் நினைவுக்கு வந்தது.
“ஆமாம், ஆனால் நான் அப்ப ஒரு முட்டாள் காக்காவா பொறந்திருந்தேன்.”
பிரியா சிரித்தாள். அவளது அம்மாவும் கூட சேர்ந்து கொண்டார்கள்.
யோசித்துப் பார்த்தேன், அவளுக்கு பதில் அளிக்கும் முயற்சியில், கடந்த சில நிமிடங்களில் நான் காக்காவாக ஒரு அவதாரமே எடுத்து, மின்விசிறி மீது அமர்ந்து கொண்டிருக்கிறேன், அதுவும் ஒரு முட்டாள் காக்காவாக.
“அப்ப நான் என்னப்பா பண்ணிட்டிருந்தேன்?”
இவளுக்கு சென்ற பிறவியில், காக்கா, அணில் அவதாரம் கொடுத்து, இவளது கேள்விக்கணைகளை சந்திக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். நானொருவன் காக்காவாக மாறியது போதும்.
“நீ அப்போதும் இப்போது போல் குட்டி பிரியாவாக தான் இருந்தாய்!”
பிரியா கொஞ்சம் மௌனமாக இருந்தாள். கடைசியாக அவளது கேள்விகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டோம் என்ற அற்ப சந்தோஷத்தில் ஈடுபட நினைத்ததோடு சரி, பிரியா கூறியது காதில் விழுந்தது.
“அப்படின்னா நான் உங்கள காக்காவா பார்த்தேனா அப்பா?”
“பார்த்தாய், ஆனா காக்காவுக்கு தலை சுத்துமானுலாம் கேள்வி கேட்கல.”
“ஏன் கேட்கலப்பா?”
“ஏன்னா உனக்கு அப்ப இருந்த அப்பா, என்ன மாதிரி ஒரு முட்டாள் இல்ல”
பிரியாவின் அம்மா மறுபடியும் சிரித்தது காதில் விழுந்தது. நான் என்னை இதுவரை இரண்டு முறை முட்டாள் என்று சொல்லி இருந்தேன். இரு முறையும் தவறாமல் சிரிப்பு சத்தம் கேட்டது. பிரியாவின் அம்மாவை மகிழ்ச்சிபடுத்துவது இவ்வளவு எளிதான விஷயம் என்று இன்று வரை எனக்குத் தெரியாமல் இருந்ததே!
“அப்பா, நீங்க ஒன்னும் முட்டாள் இல்லப்பா. காக்காவா இருக்கும் போது மட்டும் தான் முட்டாளா இருந்தீங்க. அப்பாவா இருக்கும் போது புத்திசாலி தானேப்பா நீங்க”.
நான் காக்கா வேஷம் போட்டது வீண் போகவில்லை. கனவிலும் எதிர்பார்க்காத அங்கிகாரம். முதல் முறையாக சிரித்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வாய்ப்பு. பிரியாவைத் தூக்கி அணைத்தேன், அவளது அம்மா என்னைப் பார்க்குமாறு. அவளது அம்மா இந்த அங்கிகாரத்தில் உடன்பாடு இருப்பதாக காண்பித்துக் கொள்ளவில்லை.
இப்போது மின்விசிறி கிட்டதட்ட நின்றுவிட்டது. காக்காவுக்கு தலை சுற்றி இருந்தால், இந்நேரம் மயக்கம் வந்து கீழே விழுந்திருக்க வேண்டும். காக்கா சுற்றலில் எந்த பாதிப்பும் ஏற்படாத மாதிரி, நிலையாக நின்று உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. நானும் அந்த காக்காவின் கம்பீர பார்வையைப் பார்த்து பெருமைபட்டுக் கொண்டேன், ஏதோ போன பிறவியில் நான் உண்மையிலேயே காக்காவாக இருந்தது போல. எப்படியோ என்னுடைய யூகம் சரியாக இருந்தது. (இல்லாவிட்டால், அப்பாவுக்கு இன்னமும் ‘போன பிறவி முட்டாள் காக்கா’வின் மூளை தான் இருக்கிறது என்று முடிவு கட்டி இருப்பாள் பிரியா. தவிர சற்று முன் கிடைத்த அங்கிகாரமும் பறிபோயிருக்கும்).
முற்றிலும் நின்றுவிட்ட மின்விசிறியின் மீது வீற்றிருந்த காக்காவின் “உலக மேற்பார்வை” அங்கிருந்த பிரியா வயதில் இருந்த இன்னொரு சிறுவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. அவனுக்கும் இந்த ‘தலைசுற்றல்’ கதை தெரிந்திருந்தால் சும்மா இருந்திருப்பானோ என்னவோ? கையில் கொடுக்கப்பட்ட சுண்டல் பிரசாதத்தை கணைகளாக பயன்படுத்தி காக்காவினைக் குறி வைத்தான். உலக மேற்பார்வையில் மெய்மறந்திருந்த
காக்கா அந்த கணைகளைக் காணத் தவறியது. ஆனால் நல்ல வேளையாக் அவனது சுண்டல் கணைகளும் குறி தவறியது. அவன் முயற்சியைக் கைவிடுவதாகத் தெரியவில்லை. அவனது குறி வைக்கும் திறனும் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டுக் கொண்டு தான் இருந்தது.
இம்முறை அவனது கணை குறியை அடைந்திருக்கும், ஆனால் காகம் அவனுடைய முயற்சியைப் பார்த்துவிட்டது. உடனே மின் விசிறியை விட்டு பறக்கவும் செய்தது.
பிரியாவும் கண் சிமிட்டாமல் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்தாள், கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு. எனக்கும் சற்று ஓய்வு கிடைத்தது போல் இருந்தது. காகமும் இப்போது போய் எந்த சிறுவனும் குறி வைக்கமுடியாத வகையில் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டது. நாங்கள் மெதுவாக கோயிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். புயலுக்கு பின் அமைதி போல் தோன்றியது எனக்கு. வீட்டுக்குத் திரும்பிச் செல்ல ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தோம்.
“நீங்க காக்காவா இருந்தப்ப அம்மா என்னப்பா பண்ணிட்டு இருந்தாங்க?” என்று திடீரென கேள்வி வந்தது, படப்புதிரில் விடப்பட்ட கடைசி துண்டினை படத்தினில் ஒட்டுவது போல் இருந்தது எனக்கு.
“அம்மா தானே, அப்பவும் அதே கதை தான். என்ன விரட்டிட்டுதான் இருந்தாங்க. கோயில்ல பார்த்த பையனா இருந்தாங்க உங்க அம்மா” என்றேன்.
இந்த தடவையும் ஒற்றைச் சிரிப்பு சத்தம் கேட்டது, ஆனால் பிரியாவிடமிருந்து. அ துவரை நடந்த சம்பவங்களில், என் தாழ்ந்த தருணங்களில் மட்டும் சிரிப்பை உதிர்த்து மற்ற நேரங்களில் பார்வையாளராக இருந்த என் அருமை மனைவி,
“போன ஜென்மம், முட்டாள் காக்கா, விரட்டற அம்மா. நல்லாவே அறிவியல் சிந்தனை வளர்க்கறீங்க” என்றாள்.
நான் சிரித்தேன்.
-வினோத்
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. Your votes and comments are precious.
18 Comments:
Illustrates the hypocrisy of pseudothinkers (like me :-)) and the inquisitiveness of children.
எனக்குத் தெரிந்த வரையில் இது போன்ற சூழலில் தலை சுற்றல் ஏற்படுவது காதுகளின் உள்ளே உள்ள காக்ளியாவின் அருகிலுள்ள வெஸ்டிபுலார் உறுப்புக்களில் நீர் அளவு ஏற்ற இறக்கத்தால். அது ஒரு "ஸ்பிரிட் லெவெல்" போன்று செயல்படும். இவ்வுறுப்பு பாலூட்டிகளில் மட்டுமே இருப்பதால் ஒருவேளை காக்காவிற்கு தலை சுற்றாது என்று நினைக்கிறேன். மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.
மற்றபடி காக்காவிற்கு இருபுறங்களிலும் கண்கள் உள்ளதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
very good narration..
reminded me of my daughter!
ஒரு காக்காய் சுற்றுவதைச் சுற்றியே அமைந்த கதை நன்றாக இருக்கிறது. மிகவும் அருமை.
கதை நன்றாக இருக்கிறது வினோத்.
இந்தப் பதிவு நல்லதொரு பாடம்.
குழந்தைகளிடம்கூட முன்யோசனையோடு, ஏற்கனவே திட்டம் போட்டு ஆயத்தப்படுத்தித்தான் கதைக்க வேண்டியுள்ளது;-(
A good narration.
natarajan
its a good write up.. katuththil thaan pizai irukkiRathu..hahaha
asaiyum poruLil enththa paRavaiyum vanththamaRaathu..
solla vanththa karuththu nanRaagach solli iruntheergaL
anbudan vichchu
Good narration. I liked it very much :).
வயிறு நிறைய சிரிச்சேன்..உண்மையிலயே உங்களுக்கு இப்படி நடந்துச்சான்னு தெரியல..அதூ படித்து விட்ட தமிழ் தெரியாத 4 வயது குழந்தை உள்ள நண்பருக்கு மொழி பெயர்த்து சொன்னேன். ரொம்ப ரசித்து கேட்டார்.
சுந்தர்-உங்கள் அறிவியல் பூர்வ பதில் நன்று :)
கலக்கல் பதிவு சார். சக தர்மிணிய சந்தோஷப்படுத்த "நான் முட்டாள்" அப்படீன்னு வாக்குமூலம் கொடுக்கறது நல்ல ஐடியா! குழந்தைகளுக்கு கேள்விகள் எப்படித்தான் இப்படி ஏகே 47 மாதிரி தெறிச்சு வருதோ! ஆனா அத முனிசிபாலிடி தண்ணி குழாய் மாதிரி எப்படித்தான் நம்ம கல்விமுறை மாத்துதோ!
Interesting !!Good narration !!
Adeengappa !!
I happened to come across this blog. Really nice. The story of Crow... Interesting and also states the childrens eagerness to learn new things....
-Herin
எனக்கு மிகவும் பிடித்திருந்தது.Calvin and Hobbes strip படித்தது போன்ற உணர்வு (Calvin and Dad series).இதனை ஒரு தொடராக எழுதுலாமே!
சுந்தர்:
அப்ப இதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்ய மக்கள் இருக்கிறார்கள் ;-) உங்கள் அறிவியல் விளக்கத்துக்கு நன்றி :-)
சுரேஷ்:
நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.
ராகவன், செல்வராஜ், வசந்தன், நடராஜன், மலர், சந்தோஷ் குரு:
நன்றி.
விச்சு:
கதை படித்ததற்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி :-)
ஆனால் உண்மையில் காக்கா கோயில் விசிறியில் (குறைவான வேகத்தில் நிற்கும் தருணத்தில்) வந்தமர்வதைப் பார்த்தேன் :-) அப்போது என் மனதில் எழுந்த ஐயத்தை (தலை சுற்றுமா?) எண்ணத்தை வெளியில் யாரிடமும் கேட்க முடியவில்லை, சரியென்று ஒரு சிறு குழந்தை கேட்பது போல் மெல்லிய நகைச்சுவை இழையோடுமாறு கதை அமைத்தேன், தவிர "வேட்டையாடு விளையாடு", "ஒளி இலக்கணம்" பிறகு ஒரு ligher vein கதை எழுத முடிவு செய்திருந்தேன். சரியென்று இந்த கதையைப் பின்னிப் பார்த்தேன் :-)
ரவிசங்கர்:
மிக்க நன்றி. கதையைப் படித்தற்கும் அதை மொழிபெயர்த்து சொல்லியதற்கும் :-) நிரம்ப மகிழ்ச்சி.
நீலகண்டன்:
:-)
admin, adengappa, nambi, inomeno:
நன்றி.
சஞ்சீத்:
நன்றி. Nice idea. முயற்சிக்கிறேன்.
-Vinodh
http://visai.blogspot.com
I like all your stories Vindoh....
We want more...
kirukan:
நன்றி. முயற்சிக்கிறேன்.
-வினோத்
http://visai.blogspot.com
நல்ல கதை
Post a Comment
<< Home