Monday, July 11, 2005

பச்சை

சிகப்பு விழுந்தது. தீடீரென்று வண்டியை நிறுத்த வேண்டியதாயிற்று. அவன் பக்கத்தில் வந்து கொண்டிருந்த லாரி அவன் அருகே மிதிவண்டி இடைவெளியில் அவனுக்கு மரண பயத்தை உருவாக்கும் விதத்தில் அலறிக் கொண்டு நின்றது. இன்னொரு பொறுமையில்லாத வண்டி. பச்சை வர இன்னும் 2 நிமிடம் ஆகும் என்று டிஜிடல் பலகை காட்டியது.

பக்கத்தில் பாவமாய் வந்து நின்றான் சிறுவன். கையையும் ஏந்திவிட்டான். இளம் வயதில் பிச்சை என்று பார்ப்பதா, இல்லை இளமையில் வறுமை என்று பார்ப்பதா என்று நினைத்தான். இவனுக்கு ஓரிரு ரூபாய் கொடுப்பதால் எனக்கு ஒன்றும் குறையப் போவதில்லை. இருப்பினும் பிச்சை போடுவது பிச்சைகாரர்களுக்கு ஆதரவு கொடுப்பது போலல்லவா? நான் என்ன அரசியல் தலைவனா என்ன? ஆதரவு தருவது, தராமல் இருப்பது இரண்டைப் பற்றியும் யாருக்கும் கவலை கிடையாது. இருந்தாலும் கொள்கைப் பிரச்சனையல்லவா இது? ஒரே குழப்பம்! டிஜிட்டல் பலகையை நோக்கினான். இன்னும் முழு ஒரு நிமிடம் இருப்பதாக காட்டியது.

அந்த சிறுவனும் இவன் மனஓட்டத்தை புரிந்து கொண்டது போல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். பக்கத்தில் இருக்கும் வண்டிக்காரர்களைக் கூட பார்க்காமல் இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். சரி, ஒரு முறை நகருமாறு கேட்போம். நகர்ந்தால் நல்லது, இல்லையேல் பார்ப்போம். கேட்டும் விட்டான். ஆனால் அவனோ இது வெறும் சோதனை என்று புரிந்து கொண்டது போல் இன்னும் பாவமாக கையேந்தினான். டிஜிட்டல் பலகை இன்னும் பத்து நொடிகள் தான் இருப்பதாக காண்பித்தது.

வாழ்க்கையில் இவ்வளவெல்லாம் யோசிக்கக்கூடாது என்று தாம் வைத்திருந்த இன்னொரு கொள்கையை நினைவுகூர்ந்தான். சரி, என்று பர்ஸைக் கையில் எடுத்தான். மஞ்சள் விழுந்திருந்தது. அவசரமாக பர்ஸின் சில்லறை பையில் கையை விட்டான். கையில் மாட்டியது ஐந்து ருபாய் நாணயம். ஐந்து ருபாய் சற்று அதிகம் தான். ஆனால் யோசிக்க நேரமில்லை. பச்சை விழுந்துவிட்டது. பின்னிருந்த வண்டிகள் சத்தம் போட ஆரம்பித்து விட்டன. அவன் அந்த நாணயத்தை எடுக்க அது அவன் கைதவறி கீழே விழுந்து உருண்டோடியது. அந்த சிறுவன் தன்னுடைய பொறுமைக்கு பலனாக கிடைத்தந்த அந்த நாணயத்தை துரத்த, பச்சை விழுவதற்காக இத்தனை நேரம் பொறுமையிழந்து பதறிக்கொண்டு புறப்பட்ட லாரி அந்த நாணயத்தின் பாதையில் வர, அதனைப் பின் தொடர்ந்து வந்த அந்த சிறுவன் ………..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.