Monday, October 17, 2005

ஒரு விடியலின் கதை

vitiyal-write

5:03 AM
“அம்மா, இந்த குட்டி இராட்சஸி சுமி படுத்தற பாட்டைப் பாருமா! தான் அதிசயமா சீக்கிரம் எழுந்ததோடு இல்லாம, என்னையும் எழுப்பி விடறா!” – என்று சுகி தூக்கக் கலக்கத்துடன் படுத்துக் கொண்டே கத்தினாள்.
சுமி அன்று வழக்கத்தைவிட மிக சீக்கிரமாக எழுந்துவிட்டாள்.
“சரி, உன் தங்கச்சி தானே, எதுக்கு அலுத்துக்கற?” – என்றார்கள் அம்மா.
“ஏய், சுமி, உலகத்துல முதல் சிறுமி ஆகணும்னு சொன்ன இல்ல, சீக்கிரம் மேலே ஒடு” என்று சுகி தன் தங்கை சுமியைத் துரத்தினாள்.
அப்போது தான் சுமிக்கு நினைவு வந்தது.
“அம்மா, நான்தான் இன்னைக்கு உலகத்தோட முதல் சிறுமி ஆகப் போறேன்” – என்று சொல்லிக் கொண்டே வெளியே ஓடினாள் சுமி.
“நீ தூங்கணும்கிறதுக்காக சுமியை வெளியே விரட்டறியா? இது ரொம்ப தப்பு” அம்மா அக்காவைப் பார்த்துச் சொன்னதை சுமி கண்டுகொள்ளவில்லை.

5:08 AM
சுமி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வானம் சிவப்பு வண்ணத்தில் இருந்தது. சூரியனைப் பார்த்தாள்.
“நான் தான் உலகத்தோட முதல் சிறுமீ….…” - மகிழ்ச்சியில் கத்தினாள் சுமி.
திடீரென ஏதோ நினைவுக்கு வந்தது போல் மாடியிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை, குறிப்பாக வேறெந்த சிறுமியும் கண்ணுக்குத் தென்படவில்லை. சூரியனை இன்று பார்த்த உலகத்தின் முதல் சிறுமி தான் தான் என்பது தெளிவாகிவிட்டது. உலகத்தின் முதல் சிறுமி வேண்டுவது எதுவாக இருந்தாலும் அது கிடைக்கும் என்று அம்மா சொல்லியிருந்தார்கள். சுமி யோசித்தாள். இப்போதைக்கு எதுவும் தேவைப்படவில்லை. சுமி கண்ணை மூடிக்கொண்டாள்
“எழும் ஞாயிறே வருக! உன்
ஒளி அமைதியைத் தருக!!”

பள்ளியில் சொல்லிக் கொடுத்திருந்த காலை வணக்கம் பாடலைப் பாடினாள்.
அதே உற்சாகத்துடன் தன் சாதனையை சுகியிடம் சொல்ல வீட்டுக்குள் ஓடினாள்.

6:29 AM
சுமி பாடப்புத்தகத்துடன் அமர்ந்திருந்தாள்.
“அம்மா, எனக்கென்னவோ இன்னைக்கு உலகத்துல ஏதோ பயங்கரமான விஷயம் நடக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்.” என்றாள் சுகி.
“ஏன் சுகி?” – அம்மா கேட்டார்கள்.
“பின்ன, இங்க பாருங்கம்மா, அதிகாலையில் எழுந்துட்டா, தானா குளிச்சிட்டா. பள்ளி பாடத்தெல்லாம் படிக்க புத்தகம் எடுத்து வச்சுக்கிட்டா! என்னால நம்பமுடியலை, இந்த குட்டி இராட்சஸிக்கு இன்னைக்கு என்னம்மா ஆச்சு?” – சுகி கீழே அமர்ந்திருந்த சுமியின் தலையைக் கோதியவாறே கூறினாள். “குட்டி இராட்சஸி” தான் சுகி சுமியைத் திட்டவும் கொஞ்சவும் வைத்த “செல்லப்பெயர்”.
“அம்மா, அக்காவைப் பாருங்கம்மா!” என்று பொய் அழுகைக்குரலில் கூறினாள் சுமி.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, சுமி என்னைக்குமே நல்ல பொண்ணுதான்” – என்று அம்மா சொல்ல சுமியும் “ஆமாம்” என்று பெருமையோடு அதை மறுமொழிந்தாள்.

7:16 AM
“அம்மா, பசிக்குதுமா!” – என்று கூறிக்கொண்டே சுமி சமையலறைக்குள் நுழைந்தாள்.
“சுமி, உனக்காகத் தானே சூப் செஞ்சுகிட்டிருக்கேன். அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோ.”
“அம்மா, அப்பா எப்பம்மா வருவாங்க?”
“மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா சுமி, எத்தனை தடவை தான் கேட்பாய்? நேத்திதானே அம்மா சொன்னாங்க” என்றாள் சுகி.
“சுமி, அப்பா சீக்கிரமாவே வந்துருவாங்க. மன்னர் இன்னும் இரண்டு-மூணு வாரத்திலே போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யப் போறதா உங்கப்பா சொன்னாங்க. போர் நின்ன உடனேயே உங்கப்பா சுமியைப் பார்க்க ஓடி வரப் போறாங்க!” என்று அம்மா சுமியிடம் பொறுமையாக மறுபடியும் சொன்னார்கள்.
“சரி, இதோ சூப்!”.

8:07 AM
“அம்மா, எனக்கு பொழுதே போகலை. என்ன பண்ண?”
“இந்த வயசுலே பொழுது போகலையா? அம்மா சுமியை என்ன பண்ணலாம்?” “சுமி, போய் நாள்காட்டியில் தேதியை மாற்று”
“அம்மா, அப்புறமா மாத்தறேன். பேசாமா நான் என் தோழி அகினாவைப் பார்க்கப் போகவா?” – சுமி தன் கொஞ்சும் குரலில் அம்மாவிடம் கெஞ்சினாள்.
“தோழி அகினாவா? நீ எதுக்கு அங்க போறன்னு எங்களுக்குத் தெரியாதா?” என்று சுகி சிரித்தாள்.
“அம்மா, இவ சிபியோட விளையாடத் தான் போகிறாள்!” என்று மறுபடியும் சிரித்தாள்.
அகினா பக்கத்து வீட்டு சிறுமி. சிபி அவளது பூனை. உண்மையில் அகினாவைவிட சுமிக்கு சிபியைத் தான் அதிகம் பிடிக்கும்.
“அம்மா, அதெல்லாம் இல்லை, அகினாதான் என்ன வர சொன்னா, மேலும் அவகிட்ட நான் “உலகத்தோட முதல் சிறுமி” ஆனதை சொல்லணும்.” என்று மறுபடியும் கெஞ்சினாள்.
“சரி போ, ஆனா சீக்கிரமா வரணும், அம்மா வெளியே போகணும்” என்று அம்மா கூறினார்கள்.

8:14 AM
அகினாவின் வீடு சுமார் ஐம்பது மீட்டர் தள்ளி இருந்தது. சுமி சிபியுடன் விளையாடப் போகும் மகிழ்ச்சியில் வீட்டின் வெளிச் சுவரினையொட்டி துள்ளிக் கொண்டே வந்தாள். திடீரென சத்தம் கேட்டது. மேலே பார்த்தாள். இது வரை அதைப் போல் ஒரு விமானம் சுமி பார்த்ததில்லை. “அக்கா, விமானம்!” என்று சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கித் திரும்பி ஓடினாள். இப்போது சற்று தொலைவில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஏதோ கீழே விழுந்தது.

8:15 AM
பேரொளியும் பேரிடியும் ஒரு சேர ஏற்பட்டது. சுமி பல அடி பின்னே தூக்கி எறியப்பட்டாள். சில நொடிகளுக்கு சுற்றிலும் நெருப்பு தென்பட்டது. சுமி மயக்கம் அடைந்தாள்….
.......

சுமி கண் விழித்துப் பார்த்த போது புகை சூழ்ந்திருந்தது. சுமியின் அருகே சிபி கிடந்தது. மரங்களும் கட்டிடங்களும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சிலர் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது முகம் பார்க்கவே பயம் தருவதாக இருந்தது. சுமி அழத் தொடங்கினாள். “அக்கா, அம்மா” என்று கூப்பிட்டுக் கொண்டே வீடு இருந்த திசையில் நடந்தாள்.
வீடு இருந்த இடத்தில் இப்போது சாம்பலும் எரிந்த இடிபாடுகளும் தான் இருந்தன. சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் கண்ணில் தெரியவில்லை. ஒரு மூலையில் கட்டைக்கு அடியில் ஏதோ ஒரு அசைவைப் பார்த்தாள்….
சுமி அந்த உருவத்தை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சுமி, உனக்கு ஒண்ணும் ஆகலையே? என்ன அப்படி பார்க்கற? என்ன யாருன்னு தெரியலையா? குட்டி இராட்சஸி..அம்மா எங்கே?....”

சுமியும் சுகியும் இப்போது அந்த இடத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர். திடீரென சுமி நின்றாள். இடிபாடுகளில் கிடந்த அவளது பாடப்புத்தகம் கண்ணில் தென்பட்டது. கையில் எடுத்தாள். பாதி எரிந்திருந்தது. பக்கத்தில் நாள்காட்டி கிடந்தது. சுமிக்கு அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. தேதியை மாற்றினாள். ஆகஸ்ட் 6.
*******

ஆகஸ்ட் 8
ஹிரோஷிமா நகரின் பள்ளிக்கூடமொன்றில் சுகி படுத்துக் கிடந்தாள். சுமி அருகே உட்கார்ந்திருந்தாள். சுகியின் தலையில் கட்டும் முகக்காயங்களில் மருந்தும் போடப்பட்டிருந்தது.
“நல்ல வேளை உனக்கு ஒண்ணும் ஆகலை.”
“அக்கா, அம்மா எப்ப வருவாங்க?”
சுகி சுமியை அணைத்துக் கொண்டாள்.
“அக்கா, ஏன் எல்லாரோட முகமும் மாறிப் போயிருக்கு?”
“தெரியலையே சுமி.”

ஆகஸ்ட் 10
“அக்கா, அகினா செத்துட்டாளாம். அவங்க அப்பா அழுதுகிட்டிருங்காங்க”
“சுமி, இன்னும் கொஞ்ச நாள்ல இந்த இடத்தைவிட்டு போயிடுவோம்.”
“அக்கா, அப்பா இருக்கிற இடத்துக்கு போயிடுவோம்.
“போகலாம் சுமி” - என்று சொல்லிக் கொண்டே சுமியின் தலையை சுகி கோதிவிட்டாள். சுகியின் கையோடு கொஞ்சம் முடி வந்தது.
“சுமி, உனக்கென்ன ஆச்சு? எழுந்திரு.”
சுமி எழுந்திருக்க முற்பட்ட போது, காலில் தெம்பில்லாமல் கீழே விழுந்தாள்.

ஆகஸ்ட் 11
“அக்கா, எனக்கென்ன ஆச்சு? என்னால நிக்க முடியலை. உடம்பெல்லாம் வலிக்குது.”
“சுமி, உனக்கு ஒண்ணும் ஆகலை. ஒழுங்க சாப்பிடாம இருந்த இல்ல. அதனால தான்.”
“அக்கா, இந்த இடத்தைவிட்டு எப்ப கிளம்பலாம்?”
“உனக்கு தெம்பு வந்தவுடன். கவலைப் படாம தூங்கு.”

ஆகஸ்ட் 14
“அகினா மாதிரி நான் செத்துடுவேனா அக்கா?”
“உனக்கு ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதே சுமி”
“அக்கா, நாளைக்கு சீக்கிரம் எழுந்திருக்க போறேன். உலகத்தின் முதல் சிறுமியா நான் உடம்பு சரியாக வேண்டப் போறேன். அப்ப எனக்கு எது கேட்டாலும் கிடைக்கும் இல்ல?”
“கண்டிப்பா, நம்ம நாட்டில் தான் சூரியன் முதலில் உதிப்பதே. உலகத்தோட முதல் சிறுமி கேட்பது கண்டிப்பாக கிடைக்கும்.”

ஆகஸ்ட் 15
போர் முடிவுக்கு வந்தது. ஆனால் ஏனோ அன்று விடியலில் வெளிச்சம் இல்லை.

-வினோத்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

Monday, October 03, 2005

காக்காவுக்கு தலை சுற்றுமா?

கோயிலில் தீபாராதனை ஆரம்பித்துவிட்டது. ஏனோ அங்கே ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை அணைத்துவிட்டார்கள். மின்விசிறியின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது. கோயிலின் மேற்கூரைகளில் அமர்ந்திருந்த காகம் ஒன்று மின் விசிறியின் இறக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டது. இப்போது காகமும் குறைந்து கொண்டிருந்த மின் விசிறி இறக்கையின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.

“காக்காவுக்கு தலை சுற்றாதா?” என்றாள் பிரியா.
“என்னது???”
“காக்காவுக்கு தலை சுற்றாதா?” என்று மின்விசிறி காகத்தைக் கைகாட்டினாள்.
“ரொம்ப முக்கியம்!” என்று கூறுவது போல் என்மீது பார்வை செலுத்திவிட்டு, “அங்க இங்க சுத்தி பார்க்காம, சாமி தீபாரதனையைப் பாரு பிரியா.” என்றாள் அவளது அம்மா.
“அப்பா, நீங்க சொல்லுங்கப்பா, காக்காவுக்கு தலை சுற்றாதா?”
என்னால் அவளது அம்மா அளித்த பதிலை அளிக்க முடியவில்லை.
“கேள்விகள் கேள், அப்போது தான் நிறைய தெரிந்து கொள்வாய், புரிந்து கொள்வாய்” என்று தினம் தினம் பிரியாவுக்கு அறிவுரை வழங்குபவன் நான்.
“கேள்வி கேட்டால் தான் அறிவியல் சிந்தனை வளரும்னு சொல்லிட்டு இருப்பீங்களே, பதில் சொல்லுங்க” என்று சந்தடி சாக்கில் என்னை மாட்டிவிட்டாள் என் அருமை மனைவி.
முடிந்த அளவு நான் எந்த கேள்விக்கும் ஒரு அறிவியல் சார்ந்த பதிலைத் தரவே முயற்சிப்பேன். உயர்நிலை இயற்பியல் ஆசிரியராக இருந்து கொண்டு எதாவது அர்த்தமற்ற பதில்களைத் தந்தால் நன்றாக இருக்காதல்லவா? ஆனால் “காக்காவுக்கு தலை சுற்றுமா சுற்றாதா” என்ற கேள்விக்கு உண்மையில் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடைய அறிவியல் அனுபவத்தில் உலகில் கிட்டதட்ட எல்லா விஷயங்களுக்கும் எதாவது ஆய்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் “காக்காவுக்கு தலை சுற்றுவதைப்” பற்றி இதுவரை யாரும் ஆய்வு செய்து கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. பிரியாவைத் தவிர உலகில் வேறு யாருக்கும் இந்த விஷயம் முக்கியமானதாய் படவில்லை போலும். தவிர உலகில் எத்தனை இடங்களில் காக்கைகள் மின்விசிறியில் வந்து உட்காரப் போகிறது(அதுவும் மின்விசிறி ஓடும் போது உட்கார முடியாது, நிற்கும் போது உட்காரக்கூடாது, சுற்றுவதற்கு சரியாக அணைக்கப்பட்டவுடன் வந்து அமர வேண்டும்!), அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு?
இந்த கேள்வியின் பதில் மூலம் ஒன்றும் பெரிதாக அவள் தெரிந்து கொள்ளப் போவதில்லை. எதாவது பதில் சொல்வோமென்று,
“சுற்றாது” என்று பதில் சொன்னேன்.
“எப்படிப்பா உங்களுக்குத் தெரியும்?” என்றாள்.
இந்த கேள்வியையும் நான் எதிர்பார்க்கவில்லை.
“அதோட மூளையோட அமைப்பு அப்படிமா. நம்ம மாதிரி கிடையாது. சுத்தினாலும் மயக்கம் வராது.”
“எப்படிப்பா உங்களுக்குத் தெரியும்?”
மறுபடியும் என் பதில் மீது நம்பிக்கை இல்லை. நான் இந்த பேச்சை நிறுத்தப் பார்க்கிறேன். இவள் விடுவதாக இல்லை.
“போன ஜென்மத்தில நான் காக்காவா இருந்தேன். அதனால் எனக்குத் தெரியும்.”
“அப்ப நீங்களும் போய் இந்த மாதிரி Fanல உட்கார்ந்தீங்களாப்பா?”
நான் மின்விசிறி மீது அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து பார்த்தேன். ரசிக்கும்படியாக இல்லை. இருந்தாலும், “ஆமாம். உட்கார்ந்தேன்“ என்றேன்.
“உட்காருவதுக்கு முன்னாடியே தலை சுத்தாதுனு உங்களுக்குத் தெரியுமாப்பா?”
ஒன்று மட்டும் புரிந்தது. நான் இவளை கேள்வி கேட்க ஊக்கப்படுத்தியதில் இவளது கேள்வி கேட்கும் திறமை நம்பமுடியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
“ஏதோ போய் உட்கார்ந்தேன், நல்ல வேளை ஒன்னும் ஆகலை.”
“ஆனால் ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, அதை பண்ணக்கூடாதுனு சொல்லுவீங்களேப்பா?”
போன பிறவியில் நடந்த தவறுக்கு இப்போது குறுக்கு விசாரணை நடப்பது போல் உணர்ந்தேன். என்றோ அவளிடம் நான் இதே போன்று சில கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தியதும் நினைவுக்கு வந்தது.
“ஆமாம், ஆனால் நான் அப்ப ஒரு முட்டாள் காக்காவா பொறந்திருந்தேன்.”
பிரியா சிரித்தாள். அவளது அம்மாவும் கூட சேர்ந்து கொண்டார்கள்.
யோசித்துப் பார்த்தேன், அவளுக்கு பதில் அளிக்கும் முயற்சியில், கடந்த சில நிமிடங்களில் நான் காக்காவாக ஒரு அவதாரமே எடுத்து, மின்விசிறி மீது அமர்ந்து கொண்டிருக்கிறேன், அதுவும் ஒரு முட்டாள் காக்காவாக.
“அப்ப நான் என்னப்பா பண்ணிட்டிருந்தேன்?”
இவளுக்கு சென்ற பிறவியில், காக்கா, அணில் அவதாரம் கொடுத்து, இவளது கேள்விக்கணைகளை சந்திக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். நானொருவன் காக்காவாக மாறியது போதும்.
“நீ அப்போதும் இப்போது போல் குட்டி பிரியாவாக தான் இருந்தாய்!”
பிரியா கொஞ்சம் மௌனமாக இருந்தாள். கடைசியாக அவளது கேள்விகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டோம் என்ற அற்ப சந்தோஷத்தில் ஈடுபட நினைத்ததோடு சரி, பிரியா கூறியது காதில் விழுந்தது.
“அப்படின்னா நான் உங்கள காக்காவா பார்த்தேனா அப்பா?”
“பார்த்தாய், ஆனா காக்காவுக்கு தலை சுத்துமானுலாம் கேள்வி கேட்கல.”
“ஏன் கேட்கலப்பா?”
“ஏன்னா உனக்கு அப்ப இருந்த அப்பா, என்ன மாதிரி ஒரு முட்டாள் இல்ல”
பிரியாவின் அம்மா மறுபடியும் சிரித்தது காதில் விழுந்தது. நான் என்னை இதுவரை இரண்டு முறை முட்டாள் என்று சொல்லி இருந்தேன். இரு முறையும் தவறாமல் சிரிப்பு சத்தம் கேட்டது. பிரியாவின் அம்மாவை மகிழ்ச்சிபடுத்துவது இவ்வளவு எளிதான விஷயம் என்று இன்று வரை எனக்குத் தெரியாமல் இருந்ததே!
“அப்பா, நீங்க ஒன்னும் முட்டாள் இல்லப்பா. காக்காவா இருக்கும் போது மட்டும் தான் முட்டாளா இருந்தீங்க. அப்பாவா இருக்கும் போது புத்திசாலி தானேப்பா நீங்க”.
நான் காக்கா வேஷம் போட்டது வீண் போகவில்லை. கனவிலும் எதிர்பார்க்காத அங்கிகாரம். முதல் முறையாக சிரித்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வாய்ப்பு. பிரியாவைத் தூக்கி அணைத்தேன், அவளது அம்மா என்னைப் பார்க்குமாறு. அவளது அம்மா இந்த அங்கிகாரத்தில் உடன்பாடு இருப்பதாக காண்பித்துக் கொள்ளவில்லை.
இப்போது மின்விசிறி கிட்டதட்ட நின்றுவிட்டது. காக்காவுக்கு தலை சுற்றி இருந்தால், இந்நேரம் மயக்கம் வந்து கீழே விழுந்திருக்க வேண்டும். காக்கா சுற்றலில் எந்த பாதிப்பும் ஏற்படாத மாதிரி, நிலையாக நின்று உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. நானும் அந்த காக்காவின் கம்பீர பார்வையைப் பார்த்து பெருமைபட்டுக் கொண்டேன், ஏதோ போன பிறவியில் நான் உண்மையிலேயே காக்காவாக இருந்தது போல. எப்படியோ என்னுடைய யூகம் சரியாக இருந்தது. (இல்லாவிட்டால், அப்பாவுக்கு இன்னமும் ‘போன பிறவி முட்டாள் காக்கா’வின் மூளை தான் இருக்கிறது என்று முடிவு கட்டி இருப்பாள் பிரியா. தவிர சற்று முன் கிடைத்த அங்கிகாரமும் பறிபோயிருக்கும்).

முற்றிலும் நின்றுவிட்ட மின்விசிறியின் மீது வீற்றிருந்த காக்காவின் “உலக மேற்பார்வை” அங்கிருந்த பிரியா வயதில் இருந்த இன்னொரு சிறுவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. அவனுக்கும் இந்த ‘தலைசுற்றல்’ கதை தெரிந்திருந்தால் சும்மா இருந்திருப்பானோ என்னவோ? கையில் கொடுக்கப்பட்ட சுண்டல் பிரசாதத்தை கணைகளாக பயன்படுத்தி காக்காவினைக் குறி வைத்தான். உலக மேற்பார்வையில் மெய்மறந்திருந்த
காக்கா அந்த கணைகளைக் காணத் தவறியது. ஆனால் நல்ல வேளையாக் அவனது சுண்டல் கணைகளும் குறி தவறியது. அவன் முயற்சியைக் கைவிடுவதாகத் தெரியவில்லை. அவனது குறி வைக்கும் திறனும் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டுக் கொண்டு தான் இருந்தது.
இம்முறை அவனது கணை குறியை அடைந்திருக்கும், ஆனால் காகம் அவனுடைய முயற்சியைப் பார்த்துவிட்டது. உடனே மின் விசிறியை விட்டு பறக்கவும் செய்தது.

பிரியாவும் கண் சிமிட்டாமல் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்தாள், கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு. எனக்கும் சற்று ஓய்வு கிடைத்தது போல் இருந்தது. காகமும் இப்போது போய் எந்த சிறுவனும் குறி வைக்கமுடியாத வகையில் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டது. நாங்கள் மெதுவாக கோயிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். புயலுக்கு பின் அமைதி போல் தோன்றியது எனக்கு. வீட்டுக்குத் திரும்பிச் செல்ல ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தோம்.

“நீங்க காக்காவா இருந்தப்ப அம்மா என்னப்பா பண்ணிட்டு இருந்தாங்க?” என்று திடீரென கேள்வி வந்தது, படப்புதிரில் விடப்பட்ட கடைசி துண்டினை படத்தினில் ஒட்டுவது போல் இருந்தது எனக்கு.
“அம்மா தானே, அப்பவும் அதே கதை தான். என்ன விரட்டிட்டுதான் இருந்தாங்க. கோயில்ல பார்த்த பையனா இருந்தாங்க உங்க அம்மா” என்றேன்.
இந்த தடவையும் ஒற்றைச் சிரிப்பு சத்தம் கேட்டது, ஆனால் பிரியாவிடமிருந்து. அ துவரை நடந்த சம்பவங்களில், என் தாழ்ந்த தருணங்களில் மட்டும் சிரிப்பை உதிர்த்து மற்ற நேரங்களில் பார்வையாளராக இருந்த என் அருமை மனைவி,
“போன ஜென்மம், முட்டாள் காக்கா, விரட்டற அம்மா. நல்லாவே அறிவியல் சிந்தனை வளர்க்கறீங்க” என்றாள்.
நான் சிரித்தேன்.

-வினோத்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.