Wednesday, June 29, 2005

LapTop

குளிர் அறையில் LapTop-உடன் பணிபுரிந்து விட்டு வெயில் மென்மையாக சுட்டெரிக்கும் தகவல் தொழில்நுட்ப நகரத்தின் தூசு படிந்த பெருஞ்சாலையில் மதிய உணவுக்காக உணவகம் தேடி நடப்போர், அந்த கிளை மிகுந்த பெருமரத்தின் நிழலில் அவள் தினமும் LapTop-ஐ மடியில் வைத்து மென்பொருள் வழிப்போக்கர்களின் இரக்கத்தால் பிழைப்பை நடத்துவதைக் காணலாம், வெயிலின் வெப்பத்தால் வியர்வையுடனும் பசியுடனும் கத்தும் LapTop-இன் அழுகையும் பொருட்படுத்தாது.

-வினோத்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

Thursday, June 23, 2005

ஊழி

ஐக்கிய உலகின் தலைநாட்டில் அமைந்திருந்தது நிலத்தடி நகரம். அறிவியல் தலைநகரமாகவும் விளங்கிய நிலத்தடி நகரின் பொது இடமொன்றில் அமர்ந்திருந்தனர் தணிகையும் கனிவிழியும். தணிகையும் கனிவிழியும் ஏறக்குறைய இருபது முப்பது வருடங்களுக்கு முன் நடைபெற்ற பண்பாட்டு புரட்சியின் பொழுது பிறந்தவர்கள். உலகின் அனைத்து நாடுகளும் 'ஐக்கிய உலகாக' ஒருங்கிணைந்து விட்ட பிறகு ‘ஒரு உலகு, ஒரு மொழி, ஒரு பண்பாடு’ என்று புவியே மாறியிருந்தது. ஒற்றுமையினால் அமைதி நிலவிய போதும் மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையில், அதே ஒற்றுமையினால் ஒரு வித சலிப்பு ஏற்படத் தொடங்கியது. வேற்றுமையின் தேவையை உணரத் தொடங்கினான். அந்த காலகட்டத்தில் தோன்றியது தான் "ஒற்றுமையில் வேற்றுமை" என்று அழைக்கப்பட்ட பண்பாட்டு புரட்சி இயக்கம். மக்கள் தத்தம் பண்பாட்டு வேர்களை ஆராய்ந்தறிந்து அதை பின்பற்ற தொடங்கினர். தத்தம் முன்னோர் மொழியை கற்றனர். பல அழிந்த கலைகளுக்கு உயிர் கொடுத்தனர். உலகின் மொழி தலைமொழி ஆனது, இயக்கத்தில் புத்துயிர் பெற்ற ஏனைய மொழிகள் கலைமொழிகள் ஆகின. ஐக்கிய நாட்டின் சட்ட அமைப்பு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்பொழுது பிறந்த குழந்தைகளுக்கு பல பெற்றோர்கள் கலைமொழியில் பெயரிட்டு மகிழ்ந்தனர்.


கனிவிழி ஏதோ ஒரு பானத்தை அருந்திக் கொண்டிருந்தாள். தணிகை வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அணுவீச்சு அரணாக அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி நகரின் மேற்கூரையில் இன்று வானின் காட்சிகளும் விண்வெளிக் காட்சிகளும் திரையிடப்பட்டிருந்தது. உலகத்தின் இறுதி நாள் இன்று. "தனிமை வெளியாக இருந்த இந்த விண்வெளி இனி வெற்று வெளியாக மாறப் போகிறது!" - என்று எண்ணினாள் கனிவிழி. விண்ணில் வேறெங்கும் மனிதனைப் போல் அறிவுள்ள வேறு உயிரினங்கள் இல்லாததால் விண்வெளியை தனிமை வெளி என்று அறிஞர்கள் குறிப்பிடுவது வழக்கம். இனி உலகம் அழிந்த பின் மனிதனும் இல்லை எனில் இது வெற்று வெளி தானே என்று நகைச்சுவையாக கனிவிழி மனத்தினில் நினைத்தாள். தணிகை புன்னகைத்தான். "அடப்பாவி, இது என்ன ஊழிக்காலப் புன்னகை?" - என்று கலைமொழியில் மனதுக்குள் எண்ணினாள் கனிவிழி. தணிகை பலமாக சிரித்து "ஊழிக்காலப் புன்னகை இல்லை. இது ஊழிக் கால சிரிப்பு.” என்று அவளை கிண்டல் செய்தான். “ஊழிக்காலப் புன்னகை, வெற்று வெளி, உன் கலைமொழிச் சொற்களும் சிந்தனைகளும் எங்கிருந்து தான் பிறக்கிறதோ?!" என்று ஊழியையும் மறந்து அவளை வியந்து பாராட்டினான். அப்போது தான் கனிவிழிக்கு நினைவுக்கு வந்தது - அலுவலகத்தில் இருந்தபோது தணிகையுடன் தொடங்கிய நினைவலையை நிறுத்த மறந்தது. இத்தனை நேரமாக தான் நினைத்ததையெல்லாம் இவன் கேட்டுக் கொண்டிருந்தான் என்பதை அவள் உணர, அவளும் வெட்கப் புன்னகைத்தாள்.

ஐக்கிய உலகின் தலைமை விண்ணாய்வு நிறுவனத்தில் விண்ணாராய்ச்சியாளர் கனிவிழி. தணிகை விண்வெளி சுற்றும் வாலிபன். அதே நிறுவனத்தின் ஞாயிறு வெளியெங்கும் மிதந்த ஒரே விண்வெளி வீரன். கனிவிழி ஆறு மாதங்களுக்கு முன் விண்ணளவு புகழ்பெற்றாள். கனிவிழி தான் ‘விசை’யின் வருகையை உலகுக்கு அறிவித்தது. விண்ணில் ஞாயிறு வெளியின் ஓரத்தில் தென்பட்ட அந்த பெரும் விண்கல்லை கண்டுபிடித்து, அதன் பாதையை கனிவிழி கணித்த பொழுது தான் புவிக்கு எற்பட்டிருந்த பெரும் ஆபத்து தெரிய வந்தது. விசை என்று கனிவிழியால் பெயரிடப்பட்ட அந்த விண்கல் பூமியின் மீது வந்து மோதும் பாதையில் விரைந்து கொண்டிருந்தது. உலகை முற்றிலுமாக அழிக்கக்கூடிய இந்த பேரபாயத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவுடனே, கனிவிழி அனைத்து மக்களுக்கும் உலகை காக்க வந்த தேவதையாகவே காட்சி அளித்தாள். விசை புவிவரை வந்து சேர ஆறுமாதங்கள் இருந்தன – அதற்குள் விசையினை திசைதிருப்பியோ, தகர்த்தோ உலகை காப்பாற்றி விடலாம் என்றே அனைவரும் நம்பினர்.. அவளைப் போற்றும் விதமாக, விண்வெளித் தேவதையாக அவளைச் சித்தரிக்கும் முப்பரிமாண ஒளி பிம்பங்களை உருவாக்கினர். இந்த தேவதை பிம்பங்களை உலகை வலம் வருமாறு வானில் உலாவ விட, கனிவிழி புகழ் வெளியில் மிதக்கவிடப்பட்டாள்.

கனிவிழியின் அறிக்கை வந்து நாட்கள் ஆக ஆக, இந்த பேரழிவு ஆபாயத்தை மக்கள் ஊழியின் வருகையாகவே கருதத் தொடங்கினர். ஐக்கிய உலகின் அவசர பாதுகாப்புக் குழு முதல் திட்டமாக விசையின் பாதையை மாற்ற முடிவு செய்தது. அதற்கு ஒரு பெரும் செம்புப் பாறையை விண்ணில் விசையின் பாதையில் செலுத்தி அந்த தாக்கத்தின் மூலமாக பாதையை மாற்ற முடிவு செய்தனர். ஞாயிறு வெளியின் விண்தளம் அமைக்கப்பட்டிருந்த வெளிக்கிரகங்களில் ஒன்றை பாறை ஏவுதளமாக பயன்படுத்த ஏற்பாடு நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்குள் பாறை ஏவும் நாள் வந்தது. சுமார் 5 கி.மீ நீட்டளவு கொண்டு நொடிக்கு இருநூறு கி.மீ வேகம் கொண்டு பயணித்துக் கொண்டிருந்தது விசை. தட்டப்பட்ட உருண்டையைப் போல் தோன்றிய விசையை தாக்க பாறை புறப்பட்டது. விண்வெளி படப்பெட்டிகள் மூலமாக உலக மக்களின் பார்வையில் எறியப்பட்டது பாறை. ஆனால் என்ன காரணமோ பாறை விசையினை நடுவில் தாக்குவதற்கு பதிலாக விசையின் நுனியை சற்றே உரசியது. இதனால் ஏற்பட்ட ஒரே விளைவு பூமியில் பாறை விழ இருந்த இடம் மட்டும் மாறிவிட்டது. தலைநாட்டின் கிழக்கே இருந்த கண்டத்தின் கடலோர பகுதியில் தாக்க இருந்த விசை சிறு வேகக்குறைவின் காரணமாக இப்பொழுது கடலில் விழுவதாக மாறிவிட்டது. இதனால் உலகத்தின் அழிவு விதம் மாறுமே தவிர, அழிவு மாறப் போவதில்லை.

முற்றிலும் எதிர்பாராத விதமாக அமைந்த முதல் தோல்வி உலகை உலுக்கியது. இனி விசையை அணு ஆயுதம் தகர்த்தெறிய வேண்டியது தான் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஞாயிறு வெளியின் உட்பகுதியை விசை நெருங்கிக் கொண்டிருந்தமையால் அந்த பகுதியில் அமைந்திருந்த செயற்கை விண்தளம் ஏவுதளமாக இம்முறை தேர்வு செய்யப்பட்டது. இந்த முறை எந்த தவறும் நேர்ந்துவிடக்கூடாது என்றமையால் அதிக நேரமும் எடுத்துக் கொண்டனர். ஆனால் இம்முறை அணுஆயுத ஏவுகணை, விசையை அணுயிழையில் தவறியது. ஏவுகணைக் கோளாறா அல்லது கணிப்புக் கோளாறா என்று விண் பொறியாளர்களை விசை குழப்பத்தில் ஆழ்த்த, இந்த நிகழ்ச்சி உலக மக்களை பேரச்சத்தில் ஆழ்த்தியது. கடைசி கட்ட நடவடிக்கையாக ஒரு திட்டம் தீட்டப்பட்டது. ஏவுகணை தாக்குதலுக்கு பதிலாக விண்வெளி விமானம் ஒன்றை விசையில் தரையிறங்குமாறு செலுத்துவோம். பின்னர், அந்த விமானம் ஏந்திச் சென்ற இயந்திர மனிதர்கள் கொண்டு அங்கேயே அணுஆயுத தாக்குதல் நடத்தி விசையை தகர்த்துவதே திட்டம்.

இனியும் இயந்திரங்களை நம்பிப் பயனில்லை – மனிதர்களை வைத்தே இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று உலகெங்கும் போராட்டங்கள் நடைபெற்றன. தணிகைக்கு உலகம் அழிவதைவிட விண்வெளியின் அறிவு கொண்ட ஒரே உயிரினமான மனித இனம் அழிவதில்தான் பெரும் வருத்தம். ஒரு தற்கொலை மனிதக் குழு கொண்டு உலகை காப்பதில் எந்த தவறும் இல்லை என்ற கருத்து கொண்டிருந்தான். இந்த முயற்சிக்கு தானும் முன் வந்தான். உலகை காக்கும் தற்கொலை படையின் தலைவனாக தணிகை நியமிக்கப்பட்டான். அப்போது தணிகை அவனுடைய வீரத்திற்காகவும் எண்ணத் தெளிவிற்காகவும் அனைவரின் பார்வையிலும் பெரும் இடத்தை பெற்றான். தேவதை கனிவிழி போல் தீரன் தணிகை என்ற மூன்று பரிமாண அவதாரமும் பெற்றான்.

பதினைந்து நாட்களுக்கு முன் இறுதி முயற்சிக்கு தணிகை கிளம்பிய போது அனைவரும் சோகமும் பெருமிதமும் கலந்த உணர்ச்சிகளுடன் வழியனுப்பி வைத்தனர். ஆனால் அதே மக்கள் முயற்சியின் தோல்விக்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு முன் உயிருடன் திரும்பியபோது கடும் வெறுப்புடன் நோக்கினர். தற்கொலை படையினர் முயற்சி தோல்வி பெற்றவுடனே விசையின் மேலே தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற வெட்டிப் பேச்சும் நிலவியது. விசையில் தரையிறங்கிய பின்னர் அணுஆயுத இயக்கத்தை செயல்படுத்தும் இயந்திரத்தில் மறுபடியும் கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டது. விசையின் சூழலும் சுழற்சியும் இதில் பங்கு வகித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் காரணங்களில் யாருக்கும் இந்த முறை ஆர்வம் இல்லை.

தீரன் தணிகை இரண்டு நாட்களும் கிட்டதட்ட துறவி தணிகை போல காட்சியளித்தான். இயற்கையின் பேருண்மையை பாடமாக கற்று திரும்பியவன் போன்ற தெளிவுடன் தென்பட்டான். அவன் முகத்தில் மற்றவர்களின் கடும் சினமும் வெறுப்பும் எந்தவித பாதிப்பையும் தோற்றுவித்தாக தெரியவில்லை. உலகைக் காக்கும் பெருங்கடமையை செய்யத் தவறியவன் என்ற மற்றவர்களின் தூற்றலை உள்வாங்கியதால் ஏற்பட்ட நிலையோ என்று கனிவிழி வருத்தப்பட்டாள். அலுவலகத்தில் அனைவரையும் கடைசி முறையாக சந்தித்து விட்டு திரும்பிய பிறகு இப்பொழுதுதான் தணிகை வாய்விட்டு சிரித்ததை நினைத்து உற்ற மகிழ்ச்சியுற்றாள்.

விண்ணாய்வு நிறுவனத்தில் தமக்குள் தொடர்பு கொள்ள எண்ணங்களை நேரடியாக அலைகளாக மாற்றி தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய கருவி ஒன்றை பயன்படுத்தினர். எண்ணவேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்யவும் குறிப்பிட்ட ஒருவருடன் மட்டும் தொடர்பு கொள்ளவும் இந்த நினைவலைக் கருவி பயன்படுத்தப்பட்டது. கனிவிழி காதணியாக மாட்டியிருந்த நினைவலைக் கருவியை நிறுத்தி கலைமொழியில் இறுதி முறையாக பேசத் தெடங்கினாள். “இன்னும் சில நிமிடங்களில் விசையின் தாக்குதலுக்குப் பிறகு நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு, எரிமலை வெடிப்பு என்று இயற்கையின் அனைத்து சீற்றங்களும் ஒரு சேர நடைபெறப் போகிறது” என்றாள்.

விசை பூமியின் காற்று வெளி எல்லையை நெருங்கிவிட்டது. இப்போது புவியில் இருந்த படப்பெட்டிகளே விசையை காண்பிக்கத் தொடங்கிவிட்டன. உலக மக்களின் பேரலறல் அவர்கள் காதில் விழுந்தது. காற்று வெளியின் எல்லையை அடைந்தது விசை. திடீரென யாரும் எதிர்பாராத விதமாக உலகையே படம்பிடிப்பது போல ஒரு பெரும் ஒளி விசையிலிருந்து வெளிப்பட்டது. கனிவிழி அதிசயத்தில் உறைந்தாள். காற்று வெளியை தொட்ட விசை சுவரின் மேல் பட்ட பந்தைப் போல திசை திரும்பி பூமியை விட்டு சென்றுக் கொண்டிருந்தது. உலகின் பெருமூச்சு காதில் விழுந்தது. கனிவிழியின் கணிப்பையும், மனிதனின் அறிவியல் அறிவையும் ஏளனம் செய்தவாறு புவியைவிட்டுவிட்டு ஞாயிறை நோக்கி விரைந்து கொண்டிருந்தது விசை.

இப்போது நிலத்தடி நகரைவிட்டு மேலே வந்து தெளிவான வானத்தை பார்த்துக் கொண்டிருந்தனர் கனிவிழியும் தணிகையும். விசை இப்போது விண்வெளித் துகல் போல் கண்ணுக்கு தென்பட்டது. இன்னமும் அதிசயத்தை விட்டு வெளிவரமுடியாத நிலையில் இருந்தாள் கனிவிழி. அதிசயத்தால் சற்றும் பாதிக்கப்படாதவனாய் நின்று கொண்டிருந்தான் தணிகை. தணிகை கனிவிழியைப் பார்த்து இயற்கையின் பேருண்மையை உரைப்பது போல் கூறினான்.

“இது தனிமை வெளி இல்லை!”.

-வினோத்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

Tuesday, June 21, 2005

இராணுவ வீரன்

“சென்று வருகிறேன் அம்மா”

“எப்படா வ்ருவாய்?”

“சீக்கிரமா வந்திடுவேன்” - மகன் கூறியது தாய்க்கு வெற்று ஆறுதலாகவே தோன்றியது. தாய்க்கு அவ்வளவாக இஷ்டம் இல்லை. பலரிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவள் தான்! ஆனால் உள்மனதோ விரும்பவில்லை. எந்த தாய்தான் விரும்புவாள்? இருப்பினும் கடமையாயிற்றே! மகனின் வாழ்நாள் இலட்சியம் அல்லவா? அதனால் தடுத்து நிறுத்தவில்லை.

“எதுக்குடீ இப்படி சோகமா முகத்தை வச்சிருக்க? சந்தோஷமா வழியனுப்பி வையேன்”, என்றார் தந்தை.

“இந்த ஆண்களுக்கு மட்டும் எப்படி தான் மனம் வருகிறதோ? ஒரே மகனை அங்கே அனுப்பி வச்சுட்டு எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்? போய்த் திரும்பி வந்தவர்கள் எத்தனை பேர்? இன்றைய சூழ்நிலையும் சரியில்லை. அங்கெல்லாம் நினைச்சா விடுமுறை கேட்டு வந்து பார்க்க முடியுமா? இத்தனை நாள் படாத பாடுபட்டு பிள்ளையை வளர்த்துவிட்டு இங்கே எதாவது கம்பெனியில் வேலை செய்வதை விட்டுட்டு…” தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள் தாய்.

“அம்மா, கவலைப்படாத, இது என்னோட நாடு. அடிக்கடி உனக்கு எழுதுவேன். உன்னோட பேசுவேன். சீக்கிரமா வந்துவிடுவேன். அப்பா வரேன்பா!” – என்று கூறி தன் அமெரிக்க இலட்சியம் நிறைவேறும் பூரிப்பில் விமானம் ஏறினான் இக்கால ‘போர் வீரன்’.

- வினோத்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.