வேட்டையாடு! விளையாடு!!!
“வேந்தர் விலாடிமிர் வீழ்ந்தார்! வேந்தர் வேலன் வாழ்க!!”
இராணியை அந்த இடத்துக்கு கொண்டு வந்தவுடன், வேந்தர் விலாடிமிரின் பதினைந்து வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் என்று வேலனுக்குத் தெரியும். மேற்கண்ட வரிகளை நாளைய நாளிதழ்கள் அலறும். இந்த நாளுக்குத் தான் கடந்த ஐந்து வருடங்களாக போராடிவந்தான். பன்னிரண்டு சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் வேலனின் வாழ்க்கைக் கனவை நனவாக்கிவிட்டது. விலாடிமிர் கைகுலுக்கியபோது வேலன் மகிழ்ச்சி மேகங்களில் மிதந்தான். ஆனால் விலாடிமிர் அவனிடம் கூறிய வார்த்தைகள் அவனைத் தரைக்கு கொண்டு வந்தன.
“Bad day” என்றார் விலாடிமிர். “How about tonight?”
உலகத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் செய்தி நிருபர்களுக்கும் பேட்டி அளிக்கும்போதுகூட விலாடிமிரின் கடைசி வார்த்தைகள் தான் வேலன் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. வேலன் வாழ்த்துகளுக்கு நன்றி கூறிவிட்டு அடுத்த நாளுக்குப் பேட்டியை ஒத்திவைத்தான்.
“உனக்கென்ன பைத்தியமா? உனக்கு தான் அவரைப் பத்தி தெரியுமே. ஒத்துகிறேன், அவர் ஒரு மேதை தான், ஆனால் அதே சமயத்தில ஒரு வெறியர். உலகமே இந்த நாளுக்குத் தான் காத்துக் கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை ஆட்டம் முடிந்துவிட்டது. I think he is an obsessed eccentric….” – என்றுக் கூறிக் கொண்டிருந்தார் வேலனின் சக வீரரும் பயிற்சி நண்பருமான ஆனந்தன்.
விலாடிமிர் பதினைந்து வருடங்களாக சதுரங்க உலகின் முடிசூடா மன்னராக விளங்கினாலும் செய்தி உலகிலும் சரி, சதுரங்க உலகிலும் சரி, அவருக்கு அவ்வளவாக நல்ல பெயர் இல்லை என்பதுதான் உண்மை. தொடர் வெற்றியினாலோ என்னவோ? அவர் ஒரு கிறுக்கு பிடித்த மேதை, முதலிடம் மீது வெறி பிடித்தவர் என்ற கருத்தே நிலவியது. அதற்கு பல சம்பவங்களும் கட்டுக்கதைகளும் உலவி வந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது ஐந்து வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம்…
விலாடிமிர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஆட்டத்தில் தோல்வியுற்றார். ஆட்டத்தின் முடிவில், தோல்வியோடு அவருடைய மனைவியின் மரணச் செய்தியும் வந்து சேர்ந்தது. மனைவியின் உடல் முன் நின்ற விலாடிமிர் உணர்ச்சியற்று சிந்தனையில் மூழ்கிப் போனாராம். நீண்ட நேரம் நின்ற பிறகு திடீரென சொன்னார் – “QxC5 தவறான ஆட்டம்” என்று. பிறகு தான் அழுதிருக்கிறார். அவரை “வேந்தர் விலாடிமிர்” என்று அழைத்ததைவிட “சதுரங்க சாத்தான்” என்று அழைத்த கூட்டமே அதிகம்.
ஆனால் வேலனைப் பொறுத்தவரை, விலாடிமிர் தான் வேலன் என்ற ஏகலைவனுக்குத் துரோணர். அவருடைய அபார ஆட்டங்களும் விளையாட்டு முறைகளும் கண்டு அவன் எத்தனையோ முறை வியந்ததுண்டு. வேலன் தன் சிறு வயதில் முதன்முதலில் விலாடிமிரை சந்தித்த நாள் நினைவுக்கு வந்தது. அவனுடைய வாழ்வில் மறக்கமுடியாத நாள். விலாடிமிரை பற்றி நிலவிய கருத்துகளுக்கு மாறாக, அவர் வேலனிடம் அவனை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார். ஒரு முழுமணி நேரம் அவனோடு செலவிட்டார். பல ஆட்ட நுணுக்கங்களைச் சொல்லித் தந்தார். அது மட்டுமில்லாமல் அவனிடம் ஒரிரு வார்த்தைகள் தமிழில் பேசி அவனை வியப்பில் ஆழ்த்தினார். வேலனுக்காகவே அவர் கற்றிருக்க வேண்டும். விலாடிமிரின் மென்மையும் மேதைமையும் வேலனின் இளநெஞ்சை வெகுவாக கவர்ந்தது.
இன்று வேலன் தன் குழந்தைப் பருவ கனவு நாயகனை வீழ்த்திவிட்டான். அதிகாரப்பூர்வ பட்டியலின்படி வேலன்தான் சதுரங்க உலகத்தின் புது அரசன். ஆனால் விலாடிமிர் கூறிய வார்த்தைகள், அவர் வேலனின் வெற்றியை அங்கீகரிக்கவில்லை என்று காட்டியது. வேலனைப் பொறுத்தவரை விலாடிமிர் ஒப்புக்கொள்ளாதவரை அவன் எந்த வெற்றியையும் பெறவில்லை. ஆட்டம் முடியவில்லை. இரவு ஆட்டத்துக்கு ஒப்புக் கொண்டான்.
மாஸ்கோவின் கடுங்குளிர் இரவு. வேலனும் விலாடிமிரும் வேட்டைக்குள் நுழைந்தனர். “வேட்டை” என்று உருசிய மொழியில் அழைக்கப்பட்ட அந்த இடம், மாஸ்கோ நகரின் ஓரளவு புகழ்பெற்ற இரவு நேரக் குழுமிடம். அவர்கள் உள்ளே நுழைந்த வேளை, ஆட்டமும், பாட்டமும் வேட்டை எங்கும் நிறைந்து இருந்தது. பரவி இருந்த இசையும் புகையும் நடுவே புகுந்து, கூட்டம் சற்று குறைவாக இருந்த ஒரு மூலையில் வேலனும் விலாடிமிரும் அமர்ந்தனர். எங்கு காணினும் மயங்கிய முகங்கள். ஆங்காங்கே பெண்கள் நடமாடிக் கொண்டிருந்தனர், ஆங்காங்கே நடனமாடிக் கொண்டிருந்தனர். விலாடிமிர் தன் பார்வையை எங்கும் உலவ விட்டார்.
“நாணம் பழகாப் பெண்கள்” என்றார் உருசிய மொழியில். சொல்லிவிட்டு வேலனைப் பார்த்து பெருஞ்சிரிப்பு சிரித்தார். வேலன் இயந்திர புன்னகைத்தான். வேலனுக்குத் தான் சொன்னது புரிந்திருக்காது என்பதை உணர்ந்தது போல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார், அந்த பெருஞ்சிரிப்பையும் சேர்த்து. சிரிப்பு அங்கிருந்த ஒலிக்குழப்பத்தில் கரைந்தது. காலையில் ஆட்டத்தைத் தோற்ற போது அவர் முகத்தில் தென்பட்ட கலவரம், கோபம், குழப்பம் யாவும் இப்போது காணாமல் போயிருந்தன. ஒரு புது தெளிவு பிறந்திருந்தது. விலாடிமிர் சதுரங்கப் பலகையை விரித்தார். அங்கிருந்த கூட்டத்தில் சிலர் இதனைக் கவனித்துவிட்டனர். வேலனையும் விலாடிமிரையும் அடையாளம் கண்டு கொண்டனர். வேட்டையின் முழுக் கூட்டமும் ஆட்டம் பாட்டத்தை நிறுத்திவிட்டு இப்போது அவர்களை சூழ்ந்து கொண்டது. வேட்டையின் வரலாற்றிலேயே முதன்முறையாக அமைதி நிலவியது, இத்தனை பேர் இருந்தும்.
“ஆட்டத்தை தொடங்கலாமா?” என்றான் வேலன்.
“தொடங்கலாம். ஒரு நிமிடம்.” என்று சொல்லிவிட்டு கூட்டத்தின் பக்கம் திரும்பினார் விலாடிமிர். “நாங்கள் வந்தது வெறும் விளையாட்டுக்கு இல்லை! வேட்டைக்கு!!” என்றார். கூட்டம் ஆரவாரித்தது. விலாடிமிர் கையசைத்தார். ஆட்டமும் பாட்டமும் மறுபடியும் தொடங்கியது. வேட்டை தன் பழக்கப்பட்ட சூழ்நிலைக்குத் திரும்பியது.
வெள்ளை அணியின் ஆட்டத்தை விலாடிமிர் துவக்கினார். வேலனுக்கு விலாடிமிரின் திட்டம் புரிந்துவிட்டது. உள்ளே நுழையும் வரை வேட்டைதான் ஆடுகளம் என்று வேலனுக்குத் தெரியாது. வேலன் ஆடுகளத்தில் அமைதியை எதிர்பார்ப்பான் என்று உலகத்துக்கே தெரியும். ஆரம்ப காலங்களில் சிந்திக்கும் போது ஒரு ஊசி விழும் சத்தம் கூட அவனுக்கு பிடிக்காது. வேலனின் சிறுவயதில் அவனது தாய் இதனைப் பயன்படுத்திக் கொண்டு அவனை இருபத்து நான்கு மணி நேரமும் சதுரங்கத்தைப் பற்றியே எண்ணாமல் இருக்கச் செய்ய, தொலைக்காட்சியையோ வானொலியையோ சத்தமாக வைப்பார்களாம். இதனால் சதுரங்கச் சிந்தனைத் தடைபட்டு மற்றவற்றிலும் கவனம் செலுத்துவானாம். காலப் போக்கில் வேலன் ஒரளவு சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டான். சுற்றுப்புற சூழலைத் தாண்டி தன் கவனத்தை விளையாட்டில் செலுத்தக் கற்றுக் கொண்டிருந்தான். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் என்றுமே சதுரங்கம் ஆடியது கிடையாது. ஆனால் இன்றைய ஆட்டம் ஆட்டங்களின் ஆட்டம். எந்த கவனச் சிதறலுக்கு இடம் கிடையாது. சூழலை மறந்து தனக்குள் அமைதியை தேட முயன்றான். பொறுமையாக ஆடத் தொடங்கினான்.
விலாடிமிரோ வேலனுக்கு முற்றிலும் மாறாக இருந்தார். உலகம் இதுவரைக் காணாத விலாடிமிரைக் கூட்டம் கண்டது. அவர் விளையாட்டில் அவ்வளவு கவனம் செலுத்துவதாகத் தென்படவில்லை. தன்னுடைய ஆட்டத்தின் பொழுது மட்டும் இருக்கையில் அமர்ந்தார். மேற்கத்திய இசைக்கேற்ப உடலையும் தலையையும் ஆட்டிக்கொண்டே தன் சதுரங்க ஆட்டத்தை ஆடினார். வேலனின் ஆட்ட நேரத்தில் கூட்டத்தில் கலந்தார். அலறிக் கொண்டிருந்த பின்னணியிசைக்கேற்ப நடனம் ஆடினார். அவ்வப்போது வெறித்தனத்துடன். தன் பல வருட ஆட்சிப் பொறுப்பை இறுதியாக தன் தலையில் இருந்து இறக்கி வைத்த அரசனின் களிப்பு அவரது கொண்டாட்டத்தில் தெரிந்தது. உண்மையில் அவர் நன்றாகவே விளையாடிக் கொண்டிருந்தார். இரவு நீள நீள, இருவரும் சரி சமமான நிலையில் தான் இருந்தனர். இருப்பினும் காலை உண்மையிலே “Bad day” என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார். விளையாட்டில் மட்டுமல்ல நடனத்திலும் தன் தேர்ச்சியை நிரூபித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த பெண்கள் அவரது நடனத்தில் மயங்கினர்.
“என்னை வேட்டையாடுகிறாயா?” - அவரிடம் கெஞ்சினாள் ஒரு நாணம் பழகாப் பெண்.
“வேந்தனைக் கேட்பதற்கு முன் துறவியைக் கேள்” – என்றார் வேலனைப் பார்த்துக் கொண்டே பெருங்குரலில், அந்த பெருஞ்சிரிப்பை மறக்காமல்.
“நீ?” – என்றாள் இந்த முறை நாணத்துடன்.
வேலன் பலகையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான், தன் கவனத்தைச் சிதறவிடாமல். ஒரு முறை கூட இதுவரை அவன் இருக்கையிலிருந்து நகரவில்லை. இரவின் நீளமும் அதிகரித்துக்கொண்டு தானிருந்தது. இன்னமும் எவருக்கும் வெற்றி தோல்வி ஏற்படாத நிலை. வெள்ளையில் ஒரு யானை, ஒரு இராணி, நான்கு சிப்பாய்கள், ஒரு அமைச்சர். வேலனிடம் ஒரு யானை, ஒரு குதிரை, ஒரு இராணி, ஐந்து சிப்பாய்கள்…
அருகில் வந்த நாணப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தான். தான் பழக்கி வைத்திருந்த இயந்திர புன்னகையை சிந்த முற்பட்ட போது, வேலனுக்கு ஒரு பொறி தட்டியது. வேலன் தன்னிடம் இருந்த யானையை வெட்டு கொடுக்கும் நிலையில் வைக்க முடிவு செய்தான். வெள்ளை இராணி தன் யானையை வெட்டுமாறு அதன் பாதையில் வைத்தான். இன்னும் எண்ணி இருபது ஆட்டங்களில் அவனுக்கு வெற்றி. அவனுடைய சிந்தனையை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டான். விலாடிமிரை பகலிலும் வென்றோம், இன்று இரவிலும் வென்றோம், அதுவும் அவரது குகையிலேயே. அதுவரை அமைதியாக இருந்த வேலன் காற்றில் கையைக் குத்தினான். இவனுடைய திட்டத்தை முழுவதுமாக விலாடிமிர் புரிந்து கொண்டால், இப்போதே அவனிடம் கைகுலுக்கிக் கொள்ளலாம்.
விலாடிமிர் தன் கையை முன் கொண்டு வந்தார். வேலன் கைகுலுக்க வந்தான். கைகுலுக்காமல் வேகமாக அவனது கையைத் தட்டிவிட்டார். வேலன் திடுக்கிட்டு விலாடிமிரின் முகத்தைப் பார்த்தான். மனதில் ஒரு வித அச்சம் பரவியது. விலாடிமிர் புன்னகைத்துக் கொண்டிருந்தார். வேலன் பலகையை மறுபடியும் பார்த்தான். விலாடிமிர் இராணியை எடுத்தார். உண்மையில் எடுக்கவில்லை. எடுப்பது போல் நடித்தார். யானையின் இடத்தில் வைப்பது போல் கையை நகர்த்தினார்…QxB3..பிறகு வேலன் சார்பாக ஆடுவது போல் அவனுடைய இராணியைக் கொண்டு வருவது போல் செய்ய…Qe2+.. பிறகு தனது வெள்ளை இராஜாவை...Kg1.. தன் விரல் நகர்த்தலாலே தன் சிந்தனையோட்டத்தை படம் பிடித்துக்காட்டத் தொடங்கினார், பின்னணியிசைக்கேற்ப. இசையின் வேகம் அதிகரிக்க அவரது விரல் நகர்த்தலின் வேகமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டிருந்தார். வேலனுக்கு ஏற்பட்ட அச்சம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு காவியத்தை படைக்கும் இசையமைப்பாளன் போல், ஒரு அற்புதத்தை நிகழ்த்தும் மந்திரவாதி போல், இசையுடன் கூடிய அவரது விரல் கை அசைவுகள் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
3..c4! 4.Qc3Qxd1+5.Kf2(தோற்க-5Kh2 Nf6! 6Qxc4 Kg6!! 7. Qc6 Qxd5 8. Qxa6 Qf3.. 9. Qc4 Ng4 + 10 Kg1 Qf2 + 11 Kh1…..).. 5.. Nf6! 6.Qxc4 Kg6!! 7. Qc6 (தோற்க- 7.Bb2 Ng4+)……
வேலன் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். எந்த ஆட்டப் பாதையை எடுக்கலாம், எதை எடுத்தால் தோல்வி என்று அனைத்தும் கையசைவில். விலாடிமிர் இறுதியில் ஆடினார்….
வேலன் தான் அஞ்சியது நடந்துவிட்டது என்பதை உணர்ந்தான். வேலன் சதுரங்க பலகையை பெரும் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தான். நம்ப முடியவில்லை. எப்படி இப்படி ஆடினோம். கவனச் சிதறல். கைகுலுக்கிய மறுநிமிடம் விலாடிமிர் எழுந்து நின்று இரு கைகளையும் பரப்பி மேல் நோக்கினார். கூட்டம் விலாடிமிரைக் கையில் ஏந்தியது. வேலன் கண்களை மூடிக்கொண்டான். “வேட்டை முடிந்தது” என்று விலாடிமிர் அங்கிலத்தில் கூட்டத்திடம் கூறினார். “வேந்தர் வீழவில்லை! விலாடிமிர் வாழ்க!” என்ற கூட்டத்தின் பேரொலி காதில் விழுந்தது போல் இருந்தது. வேலனால் இனியும் சூழலை மறந்து இருக்க முடியவில்லை. ஆட்டம் முடிந்தது. கிளம்பினான்.
கிட்டத்தட்ட விடியற்காலை. வேலன் தன் அறையில் உறக்கமின்றி படுத்திருந்தான். இன்னமும் தோல்வியின் குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தான். காலையின் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. பதினோரு சுற்றுகள் பிறகு சரிசமமான நிலையில் இருக்க, நிர்ணயிக்கும் 12-ஆம் ஆட்டத்தில் அற்புதமாக ஆடி வென்றது, விலாடிமிரின் “Bad day” கூற்று எல்லாம் நினைவில் வந்து போயின. இரவில் விலாடிமிரின் வேட்டை ஆட்டம். ஒரு நகர்த்தலில் ஏற்பட்ட கவனச் சிதறல். கறுப்பு இராணி 5e வில் இருக்க, வெள்ளை அமைச்சர் 1c வில் இருக்க, கறுப்பு சிப்பாய்கள் 5c, 5f, 6g வில் இருக்க… இல்லை நான் ஆடிய போது என் கறுப்பு சிப்பாய் 5gயில் அல்லவா இருந்த….தொலைபேசி மணி அவன் சிந்தனை ஓட்டத்தை நிறுத்தியது. எதிர் முனையில் விலாடிமிர்.
“வேந்தன் விலாடிமிர் வீழ்ந்தான், வேந்தர் வேலன் வாழ்க” என்றார் உருசிய செந்தமிழில்.
-வினோத்
பி.கு: இக்கதை முகமூடி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. போட்டியின் நடுவர் மாலனின் கருத்துகள் பின்வருமாறு:
"பொதுவாக தமிழ்ச் சிறுகதைகள் எடுத்துக் கொள்ளும் கதைக்களனிலிருந்து வித்தியாசமான ஒன்றைத் தேர்ந்து கொண்டிருக்கிறார் 'வேட்டையாடு விளையாடு' ஆசிரியர். மெருகேறிய நடை.சிறுகதையின் சாத்தியங்கள், அதன் வடிவம் அதன் ஆசிரியருக்கு விதிக்கும் வரம்புகள் இவற்றை விளங்கிக் கொண்டு, திறமையோடு அதைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். சதுரங்க ஆட்டத்தின் தொழில்நுட்பத் தகவல்களின் அளவு அதிகம். ஆனால் அதுதான் கதைக்கு ஒருவித authenticityயைக் கொடுக்கிறது. என்றாலும் சாதாரண வாசகன் அவற்றில் சலிப்படையக் கூடும்."
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. Your votes and comments are precious.