ஒரு விடியலின் கதை
5:03 AM
“அம்மா, இந்த குட்டி இராட்சஸி சுமி படுத்தற பாட்டைப் பாருமா! தான் அதிசயமா சீக்கிரம் எழுந்ததோடு இல்லாம, என்னையும் எழுப்பி விடறா!” – என்று சுகி தூக்கக் கலக்கத்துடன் படுத்துக் கொண்டே கத்தினாள்.
சுமி அன்று வழக்கத்தைவிட மிக சீக்கிரமாக எழுந்துவிட்டாள்.
“சரி, உன் தங்கச்சி தானே, எதுக்கு அலுத்துக்கற?” – என்றார்கள் அம்மா.
“ஏய், சுமி, உலகத்துல முதல் சிறுமி ஆகணும்னு சொன்ன இல்ல, சீக்கிரம் மேலே ஒடு” என்று சுகி தன் தங்கை சுமியைத் துரத்தினாள்.
அப்போது தான் சுமிக்கு நினைவு வந்தது.
“அம்மா, நான்தான் இன்னைக்கு உலகத்தோட முதல் சிறுமி ஆகப் போறேன்” – என்று சொல்லிக் கொண்டே வெளியே ஓடினாள் சுமி.
“நீ தூங்கணும்கிறதுக்காக சுமியை வெளியே விரட்டறியா? இது ரொம்ப தப்பு” அம்மா அக்காவைப் பார்த்துச் சொன்னதை சுமி கண்டுகொள்ளவில்லை.
5:08 AM
சுமி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வானம் சிவப்பு வண்ணத்தில் இருந்தது. சூரியனைப் பார்த்தாள்.
“நான் தான் உலகத்தோட முதல் சிறுமீ….…” - மகிழ்ச்சியில் கத்தினாள் சுமி.
திடீரென ஏதோ நினைவுக்கு வந்தது போல் மாடியிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை, குறிப்பாக வேறெந்த சிறுமியும் கண்ணுக்குத் தென்படவில்லை. சூரியனை இன்று பார்த்த உலகத்தின் முதல் சிறுமி தான் தான் என்பது தெளிவாகிவிட்டது. உலகத்தின் முதல் சிறுமி வேண்டுவது எதுவாக இருந்தாலும் அது கிடைக்கும் என்று அம்மா சொல்லியிருந்தார்கள். சுமி யோசித்தாள். இப்போதைக்கு எதுவும் தேவைப்படவில்லை. சுமி கண்ணை மூடிக்கொண்டாள்
“எழும் ஞாயிறே வருக! உன்
ஒளி அமைதியைத் தருக!!”
பள்ளியில் சொல்லிக் கொடுத்திருந்த காலை வணக்கம் பாடலைப் பாடினாள்.
அதே உற்சாகத்துடன் தன் சாதனையை சுகியிடம் சொல்ல வீட்டுக்குள் ஓடினாள்.
6:29 AM
சுமி பாடப்புத்தகத்துடன் அமர்ந்திருந்தாள்.
“அம்மா, எனக்கென்னவோ இன்னைக்கு உலகத்துல ஏதோ பயங்கரமான விஷயம் நடக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்.” என்றாள் சுகி.
“ஏன் சுகி?” – அம்மா கேட்டார்கள்.
“பின்ன, இங்க பாருங்கம்மா, அதிகாலையில் எழுந்துட்டா, தானா குளிச்சிட்டா. பள்ளி பாடத்தெல்லாம் படிக்க புத்தகம் எடுத்து வச்சுக்கிட்டா! என்னால நம்பமுடியலை, இந்த குட்டி இராட்சஸிக்கு இன்னைக்கு என்னம்மா ஆச்சு?” – சுகி கீழே அமர்ந்திருந்த சுமியின் தலையைக் கோதியவாறே கூறினாள். “குட்டி இராட்சஸி” தான் சுகி சுமியைத் திட்டவும் கொஞ்சவும் வைத்த “செல்லப்பெயர்”.
“அம்மா, அக்காவைப் பாருங்கம்மா!” என்று பொய் அழுகைக்குரலில் கூறினாள் சுமி.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, சுமி என்னைக்குமே நல்ல பொண்ணுதான்” – என்று அம்மா சொல்ல சுமியும் “ஆமாம்” என்று பெருமையோடு அதை மறுமொழிந்தாள்.
7:16 AM
“அம்மா, பசிக்குதுமா!” – என்று கூறிக்கொண்டே சுமி சமையலறைக்குள் நுழைந்தாள்.
“சுமி, உனக்காகத் தானே சூப் செஞ்சுகிட்டிருக்கேன். அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோ.”
“அம்மா, அப்பா எப்பம்மா வருவாங்க?”
“மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா சுமி, எத்தனை தடவை தான் கேட்பாய்? நேத்திதானே அம்மா சொன்னாங்க” என்றாள் சுகி.
“சுமி, அப்பா சீக்கிரமாவே வந்துருவாங்க. மன்னர் இன்னும் இரண்டு-மூணு வாரத்திலே போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யப் போறதா உங்கப்பா சொன்னாங்க. போர் நின்ன உடனேயே உங்கப்பா சுமியைப் பார்க்க ஓடி வரப் போறாங்க!” என்று அம்மா சுமியிடம் பொறுமையாக மறுபடியும் சொன்னார்கள்.
“சரி, இதோ சூப்!”.
8:07 AM
“அம்மா, எனக்கு பொழுதே போகலை. என்ன பண்ண?”
“இந்த வயசுலே பொழுது போகலையா? அம்மா சுமியை என்ன பண்ணலாம்?” “சுமி, போய் நாள்காட்டியில் தேதியை மாற்று”
“அம்மா, அப்புறமா மாத்தறேன். பேசாமா நான் என் தோழி அகினாவைப் பார்க்கப் போகவா?” – சுமி தன் கொஞ்சும் குரலில் அம்மாவிடம் கெஞ்சினாள்.
“தோழி அகினாவா? நீ எதுக்கு அங்க போறன்னு எங்களுக்குத் தெரியாதா?” என்று சுகி சிரித்தாள்.
“அம்மா, இவ சிபியோட விளையாடத் தான் போகிறாள்!” என்று மறுபடியும் சிரித்தாள்.
அகினா பக்கத்து வீட்டு சிறுமி. சிபி அவளது பூனை. உண்மையில் அகினாவைவிட சுமிக்கு சிபியைத் தான் அதிகம் பிடிக்கும்.
“அம்மா, அதெல்லாம் இல்லை, அகினாதான் என்ன வர சொன்னா, மேலும் அவகிட்ட நான் “உலகத்தோட முதல் சிறுமி” ஆனதை சொல்லணும்.” என்று மறுபடியும் கெஞ்சினாள்.
“சரி போ, ஆனா சீக்கிரமா வரணும், அம்மா வெளியே போகணும்” என்று அம்மா கூறினார்கள்.
8:14 AM
அகினாவின் வீடு சுமார் ஐம்பது மீட்டர் தள்ளி இருந்தது. சுமி சிபியுடன் விளையாடப் போகும் மகிழ்ச்சியில் வீட்டின் வெளிச் சுவரினையொட்டி துள்ளிக் கொண்டே வந்தாள். திடீரென சத்தம் கேட்டது. மேலே பார்த்தாள். இது வரை அதைப் போல் ஒரு விமானம் சுமி பார்த்ததில்லை. “அக்கா, விமானம்!” என்று சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கித் திரும்பி ஓடினாள். இப்போது சற்று தொலைவில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஏதோ கீழே விழுந்தது.
8:15 AM
பேரொளியும் பேரிடியும் ஒரு சேர ஏற்பட்டது. சுமி பல அடி பின்னே தூக்கி எறியப்பட்டாள். சில நொடிகளுக்கு சுற்றிலும் நெருப்பு தென்பட்டது. சுமி மயக்கம் அடைந்தாள்….
சுமி கண் விழித்துப் பார்த்த போது புகை சூழ்ந்திருந்தது. சுமியின் அருகே சிபி கிடந்தது. மரங்களும் கட்டிடங்களும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சிலர் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது முகம் பார்க்கவே பயம் தருவதாக இருந்தது. சுமி அழத் தொடங்கினாள். “அக்கா, அம்மா” என்று கூப்பிட்டுக் கொண்டே வீடு இருந்த திசையில் நடந்தாள்.
வீடு இருந்த இடத்தில் இப்போது சாம்பலும் எரிந்த இடிபாடுகளும் தான் இருந்தன. சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் கண்ணில் தெரியவில்லை. ஒரு மூலையில் கட்டைக்கு அடியில் ஏதோ ஒரு அசைவைப் பார்த்தாள்….
சுமி அந்த உருவத்தை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சுமி, உனக்கு ஒண்ணும் ஆகலையே? என்ன அப்படி பார்க்கற? என்ன யாருன்னு தெரியலையா? குட்டி இராட்சஸி..அம்மா எங்கே?....”
சுமியும் சுகியும் இப்போது அந்த இடத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர். திடீரென சுமி நின்றாள். இடிபாடுகளில் கிடந்த அவளது பாடப்புத்தகம் கண்ணில் தென்பட்டது. கையில் எடுத்தாள். பாதி எரிந்திருந்தது. பக்கத்தில் நாள்காட்டி கிடந்தது. சுமிக்கு அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. தேதியை மாற்றினாள். ஆகஸ்ட் 6.
ஆகஸ்ட் 8
ஹிரோஷிமா நகரின் பள்ளிக்கூடமொன்றில் சுகி படுத்துக் கிடந்தாள். சுமி அருகே உட்கார்ந்திருந்தாள். சுகியின் தலையில் கட்டும் முகக்காயங்களில் மருந்தும் போடப்பட்டிருந்தது.
“நல்ல வேளை உனக்கு ஒண்ணும் ஆகலை.”
“அக்கா, அம்மா எப்ப வருவாங்க?”
சுகி சுமியை அணைத்துக் கொண்டாள்.
“அக்கா, ஏன் எல்லாரோட முகமும் மாறிப் போயிருக்கு?”
“தெரியலையே சுமி.”
ஆகஸ்ட் 10
“அக்கா, அகினா செத்துட்டாளாம். அவங்க அப்பா அழுதுகிட்டிருங்காங்க”
“சுமி, இன்னும் கொஞ்ச நாள்ல இந்த இடத்தைவிட்டு போயிடுவோம்.”
“அக்கா, அப்பா இருக்கிற இடத்துக்கு போயிடுவோம்.
“போகலாம் சுமி” - என்று சொல்லிக் கொண்டே சுமியின் தலையை சுகி கோதிவிட்டாள். சுகியின் கையோடு கொஞ்சம் முடி வந்தது.
“சுமி, உனக்கென்ன ஆச்சு? எழுந்திரு.”
சுமி எழுந்திருக்க முற்பட்ட போது, காலில் தெம்பில்லாமல் கீழே விழுந்தாள்.
ஆகஸ்ட் 11
“அக்கா, எனக்கென்ன ஆச்சு? என்னால நிக்க முடியலை. உடம்பெல்லாம் வலிக்குது.”
“சுமி, உனக்கு ஒண்ணும் ஆகலை. ஒழுங்க சாப்பிடாம இருந்த இல்ல. அதனால தான்.”
“அக்கா, இந்த இடத்தைவிட்டு எப்ப கிளம்பலாம்?”
“உனக்கு தெம்பு வந்தவுடன். கவலைப் படாம தூங்கு.”
ஆகஸ்ட் 14
“அகினா மாதிரி நான் செத்துடுவேனா அக்கா?”
“உனக்கு ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதே சுமி”
“அக்கா, நாளைக்கு சீக்கிரம் எழுந்திருக்க போறேன். உலகத்தின் முதல் சிறுமியா நான் உடம்பு சரியாக வேண்டப் போறேன். அப்ப எனக்கு எது கேட்டாலும் கிடைக்கும் இல்ல?”
“கண்டிப்பா, நம்ம நாட்டில் தான் சூரியன் முதலில் உதிப்பதே. உலகத்தோட முதல் சிறுமி கேட்பது கண்டிப்பாக கிடைக்கும்.”
ஆகஸ்ட் 15
போர் முடிவுக்கு வந்தது. ஆனால் ஏனோ அன்று விடியலில் வெளிச்சம் இல்லை.
-வினோத்