Monday, October 17, 2005

ஒரு விடியலின் கதை

vitiyal-write

5:03 AM
“அம்மா, இந்த குட்டி இராட்சஸி சுமி படுத்தற பாட்டைப் பாருமா! தான் அதிசயமா சீக்கிரம் எழுந்ததோடு இல்லாம, என்னையும் எழுப்பி விடறா!” – என்று சுகி தூக்கக் கலக்கத்துடன் படுத்துக் கொண்டே கத்தினாள்.
சுமி அன்று வழக்கத்தைவிட மிக சீக்கிரமாக எழுந்துவிட்டாள்.
“சரி, உன் தங்கச்சி தானே, எதுக்கு அலுத்துக்கற?” – என்றார்கள் அம்மா.
“ஏய், சுமி, உலகத்துல முதல் சிறுமி ஆகணும்னு சொன்ன இல்ல, சீக்கிரம் மேலே ஒடு” என்று சுகி தன் தங்கை சுமியைத் துரத்தினாள்.
அப்போது தான் சுமிக்கு நினைவு வந்தது.
“அம்மா, நான்தான் இன்னைக்கு உலகத்தோட முதல் சிறுமி ஆகப் போறேன்” – என்று சொல்லிக் கொண்டே வெளியே ஓடினாள் சுமி.
“நீ தூங்கணும்கிறதுக்காக சுமியை வெளியே விரட்டறியா? இது ரொம்ப தப்பு” அம்மா அக்காவைப் பார்த்துச் சொன்னதை சுமி கண்டுகொள்ளவில்லை.

5:08 AM
சுமி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வானம் சிவப்பு வண்ணத்தில் இருந்தது. சூரியனைப் பார்த்தாள்.
“நான் தான் உலகத்தோட முதல் சிறுமீ….…” - மகிழ்ச்சியில் கத்தினாள் சுமி.
திடீரென ஏதோ நினைவுக்கு வந்தது போல் மாடியிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை, குறிப்பாக வேறெந்த சிறுமியும் கண்ணுக்குத் தென்படவில்லை. சூரியனை இன்று பார்த்த உலகத்தின் முதல் சிறுமி தான் தான் என்பது தெளிவாகிவிட்டது. உலகத்தின் முதல் சிறுமி வேண்டுவது எதுவாக இருந்தாலும் அது கிடைக்கும் என்று அம்மா சொல்லியிருந்தார்கள். சுமி யோசித்தாள். இப்போதைக்கு எதுவும் தேவைப்படவில்லை. சுமி கண்ணை மூடிக்கொண்டாள்
“எழும் ஞாயிறே வருக! உன்
ஒளி அமைதியைத் தருக!!”

பள்ளியில் சொல்லிக் கொடுத்திருந்த காலை வணக்கம் பாடலைப் பாடினாள்.
அதே உற்சாகத்துடன் தன் சாதனையை சுகியிடம் சொல்ல வீட்டுக்குள் ஓடினாள்.

6:29 AM
சுமி பாடப்புத்தகத்துடன் அமர்ந்திருந்தாள்.
“அம்மா, எனக்கென்னவோ இன்னைக்கு உலகத்துல ஏதோ பயங்கரமான விஷயம் நடக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்.” என்றாள் சுகி.
“ஏன் சுகி?” – அம்மா கேட்டார்கள்.
“பின்ன, இங்க பாருங்கம்மா, அதிகாலையில் எழுந்துட்டா, தானா குளிச்சிட்டா. பள்ளி பாடத்தெல்லாம் படிக்க புத்தகம் எடுத்து வச்சுக்கிட்டா! என்னால நம்பமுடியலை, இந்த குட்டி இராட்சஸிக்கு இன்னைக்கு என்னம்மா ஆச்சு?” – சுகி கீழே அமர்ந்திருந்த சுமியின் தலையைக் கோதியவாறே கூறினாள். “குட்டி இராட்சஸி” தான் சுகி சுமியைத் திட்டவும் கொஞ்சவும் வைத்த “செல்லப்பெயர்”.
“அம்மா, அக்காவைப் பாருங்கம்மா!” என்று பொய் அழுகைக்குரலில் கூறினாள் சுமி.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, சுமி என்னைக்குமே நல்ல பொண்ணுதான்” – என்று அம்மா சொல்ல சுமியும் “ஆமாம்” என்று பெருமையோடு அதை மறுமொழிந்தாள்.

7:16 AM
“அம்மா, பசிக்குதுமா!” – என்று கூறிக்கொண்டே சுமி சமையலறைக்குள் நுழைந்தாள்.
“சுமி, உனக்காகத் தானே சூப் செஞ்சுகிட்டிருக்கேன். அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோ.”
“அம்மா, அப்பா எப்பம்மா வருவாங்க?”
“மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா சுமி, எத்தனை தடவை தான் கேட்பாய்? நேத்திதானே அம்மா சொன்னாங்க” என்றாள் சுகி.
“சுமி, அப்பா சீக்கிரமாவே வந்துருவாங்க. மன்னர் இன்னும் இரண்டு-மூணு வாரத்திலே போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யப் போறதா உங்கப்பா சொன்னாங்க. போர் நின்ன உடனேயே உங்கப்பா சுமியைப் பார்க்க ஓடி வரப் போறாங்க!” என்று அம்மா சுமியிடம் பொறுமையாக மறுபடியும் சொன்னார்கள்.
“சரி, இதோ சூப்!”.

8:07 AM
“அம்மா, எனக்கு பொழுதே போகலை. என்ன பண்ண?”
“இந்த வயசுலே பொழுது போகலையா? அம்மா சுமியை என்ன பண்ணலாம்?” “சுமி, போய் நாள்காட்டியில் தேதியை மாற்று”
“அம்மா, அப்புறமா மாத்தறேன். பேசாமா நான் என் தோழி அகினாவைப் பார்க்கப் போகவா?” – சுமி தன் கொஞ்சும் குரலில் அம்மாவிடம் கெஞ்சினாள்.
“தோழி அகினாவா? நீ எதுக்கு அங்க போறன்னு எங்களுக்குத் தெரியாதா?” என்று சுகி சிரித்தாள்.
“அம்மா, இவ சிபியோட விளையாடத் தான் போகிறாள்!” என்று மறுபடியும் சிரித்தாள்.
அகினா பக்கத்து வீட்டு சிறுமி. சிபி அவளது பூனை. உண்மையில் அகினாவைவிட சுமிக்கு சிபியைத் தான் அதிகம் பிடிக்கும்.
“அம்மா, அதெல்லாம் இல்லை, அகினாதான் என்ன வர சொன்னா, மேலும் அவகிட்ட நான் “உலகத்தோட முதல் சிறுமி” ஆனதை சொல்லணும்.” என்று மறுபடியும் கெஞ்சினாள்.
“சரி போ, ஆனா சீக்கிரமா வரணும், அம்மா வெளியே போகணும்” என்று அம்மா கூறினார்கள்.

8:14 AM
அகினாவின் வீடு சுமார் ஐம்பது மீட்டர் தள்ளி இருந்தது. சுமி சிபியுடன் விளையாடப் போகும் மகிழ்ச்சியில் வீட்டின் வெளிச் சுவரினையொட்டி துள்ளிக் கொண்டே வந்தாள். திடீரென சத்தம் கேட்டது. மேலே பார்த்தாள். இது வரை அதைப் போல் ஒரு விமானம் சுமி பார்த்ததில்லை. “அக்கா, விமானம்!” என்று சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கித் திரும்பி ஓடினாள். இப்போது சற்று தொலைவில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஏதோ கீழே விழுந்தது.

8:15 AM
பேரொளியும் பேரிடியும் ஒரு சேர ஏற்பட்டது. சுமி பல அடி பின்னே தூக்கி எறியப்பட்டாள். சில நொடிகளுக்கு சுற்றிலும் நெருப்பு தென்பட்டது. சுமி மயக்கம் அடைந்தாள்….
.......

சுமி கண் விழித்துப் பார்த்த போது புகை சூழ்ந்திருந்தது. சுமியின் அருகே சிபி கிடந்தது. மரங்களும் கட்டிடங்களும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சிலர் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது முகம் பார்க்கவே பயம் தருவதாக இருந்தது. சுமி அழத் தொடங்கினாள். “அக்கா, அம்மா” என்று கூப்பிட்டுக் கொண்டே வீடு இருந்த திசையில் நடந்தாள்.
வீடு இருந்த இடத்தில் இப்போது சாம்பலும் எரிந்த இடிபாடுகளும் தான் இருந்தன. சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் கண்ணில் தெரியவில்லை. ஒரு மூலையில் கட்டைக்கு அடியில் ஏதோ ஒரு அசைவைப் பார்த்தாள்….
சுமி அந்த உருவத்தை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சுமி, உனக்கு ஒண்ணும் ஆகலையே? என்ன அப்படி பார்க்கற? என்ன யாருன்னு தெரியலையா? குட்டி இராட்சஸி..அம்மா எங்கே?....”

சுமியும் சுகியும் இப்போது அந்த இடத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர். திடீரென சுமி நின்றாள். இடிபாடுகளில் கிடந்த அவளது பாடப்புத்தகம் கண்ணில் தென்பட்டது. கையில் எடுத்தாள். பாதி எரிந்திருந்தது. பக்கத்தில் நாள்காட்டி கிடந்தது. சுமிக்கு அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. தேதியை மாற்றினாள். ஆகஸ்ட் 6.
*******

ஆகஸ்ட் 8
ஹிரோஷிமா நகரின் பள்ளிக்கூடமொன்றில் சுகி படுத்துக் கிடந்தாள். சுமி அருகே உட்கார்ந்திருந்தாள். சுகியின் தலையில் கட்டும் முகக்காயங்களில் மருந்தும் போடப்பட்டிருந்தது.
“நல்ல வேளை உனக்கு ஒண்ணும் ஆகலை.”
“அக்கா, அம்மா எப்ப வருவாங்க?”
சுகி சுமியை அணைத்துக் கொண்டாள்.
“அக்கா, ஏன் எல்லாரோட முகமும் மாறிப் போயிருக்கு?”
“தெரியலையே சுமி.”

ஆகஸ்ட் 10
“அக்கா, அகினா செத்துட்டாளாம். அவங்க அப்பா அழுதுகிட்டிருங்காங்க”
“சுமி, இன்னும் கொஞ்ச நாள்ல இந்த இடத்தைவிட்டு போயிடுவோம்.”
“அக்கா, அப்பா இருக்கிற இடத்துக்கு போயிடுவோம்.
“போகலாம் சுமி” - என்று சொல்லிக் கொண்டே சுமியின் தலையை சுகி கோதிவிட்டாள். சுகியின் கையோடு கொஞ்சம் முடி வந்தது.
“சுமி, உனக்கென்ன ஆச்சு? எழுந்திரு.”
சுமி எழுந்திருக்க முற்பட்ட போது, காலில் தெம்பில்லாமல் கீழே விழுந்தாள்.

ஆகஸ்ட் 11
“அக்கா, எனக்கென்ன ஆச்சு? என்னால நிக்க முடியலை. உடம்பெல்லாம் வலிக்குது.”
“சுமி, உனக்கு ஒண்ணும் ஆகலை. ஒழுங்க சாப்பிடாம இருந்த இல்ல. அதனால தான்.”
“அக்கா, இந்த இடத்தைவிட்டு எப்ப கிளம்பலாம்?”
“உனக்கு தெம்பு வந்தவுடன். கவலைப் படாம தூங்கு.”

ஆகஸ்ட் 14
“அகினா மாதிரி நான் செத்துடுவேனா அக்கா?”
“உனக்கு ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதே சுமி”
“அக்கா, நாளைக்கு சீக்கிரம் எழுந்திருக்க போறேன். உலகத்தின் முதல் சிறுமியா நான் உடம்பு சரியாக வேண்டப் போறேன். அப்ப எனக்கு எது கேட்டாலும் கிடைக்கும் இல்ல?”
“கண்டிப்பா, நம்ம நாட்டில் தான் சூரியன் முதலில் உதிப்பதே. உலகத்தோட முதல் சிறுமி கேட்பது கண்டிப்பாக கிடைக்கும்.”

ஆகஸ்ட் 15
போர் முடிவுக்கு வந்தது. ஆனால் ஏனோ அன்று விடியலில் வெளிச்சம் இல்லை.

-வினோத்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

Monday, October 03, 2005

காக்காவுக்கு தலை சுற்றுமா?

கோயிலில் தீபாராதனை ஆரம்பித்துவிட்டது. ஏனோ அங்கே ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை அணைத்துவிட்டார்கள். மின்விசிறியின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது. கோயிலின் மேற்கூரைகளில் அமர்ந்திருந்த காகம் ஒன்று மின் விசிறியின் இறக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டது. இப்போது காகமும் குறைந்து கொண்டிருந்த மின் விசிறி இறக்கையின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.

“காக்காவுக்கு தலை சுற்றாதா?” என்றாள் பிரியா.
“என்னது???”
“காக்காவுக்கு தலை சுற்றாதா?” என்று மின்விசிறி காகத்தைக் கைகாட்டினாள்.
“ரொம்ப முக்கியம்!” என்று கூறுவது போல் என்மீது பார்வை செலுத்திவிட்டு, “அங்க இங்க சுத்தி பார்க்காம, சாமி தீபாரதனையைப் பாரு பிரியா.” என்றாள் அவளது அம்மா.
“அப்பா, நீங்க சொல்லுங்கப்பா, காக்காவுக்கு தலை சுற்றாதா?”
என்னால் அவளது அம்மா அளித்த பதிலை அளிக்க முடியவில்லை.
“கேள்விகள் கேள், அப்போது தான் நிறைய தெரிந்து கொள்வாய், புரிந்து கொள்வாய்” என்று தினம் தினம் பிரியாவுக்கு அறிவுரை வழங்குபவன் நான்.
“கேள்வி கேட்டால் தான் அறிவியல் சிந்தனை வளரும்னு சொல்லிட்டு இருப்பீங்களே, பதில் சொல்லுங்க” என்று சந்தடி சாக்கில் என்னை மாட்டிவிட்டாள் என் அருமை மனைவி.
முடிந்த அளவு நான் எந்த கேள்விக்கும் ஒரு அறிவியல் சார்ந்த பதிலைத் தரவே முயற்சிப்பேன். உயர்நிலை இயற்பியல் ஆசிரியராக இருந்து கொண்டு எதாவது அர்த்தமற்ற பதில்களைத் தந்தால் நன்றாக இருக்காதல்லவா? ஆனால் “காக்காவுக்கு தலை சுற்றுமா சுற்றாதா” என்ற கேள்விக்கு உண்மையில் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடைய அறிவியல் அனுபவத்தில் உலகில் கிட்டதட்ட எல்லா விஷயங்களுக்கும் எதாவது ஆய்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் “காக்காவுக்கு தலை சுற்றுவதைப்” பற்றி இதுவரை யாரும் ஆய்வு செய்து கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. பிரியாவைத் தவிர உலகில் வேறு யாருக்கும் இந்த விஷயம் முக்கியமானதாய் படவில்லை போலும். தவிர உலகில் எத்தனை இடங்களில் காக்கைகள் மின்விசிறியில் வந்து உட்காரப் போகிறது(அதுவும் மின்விசிறி ஓடும் போது உட்கார முடியாது, நிற்கும் போது உட்காரக்கூடாது, சுற்றுவதற்கு சரியாக அணைக்கப்பட்டவுடன் வந்து அமர வேண்டும்!), அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு?
இந்த கேள்வியின் பதில் மூலம் ஒன்றும் பெரிதாக அவள் தெரிந்து கொள்ளப் போவதில்லை. எதாவது பதில் சொல்வோமென்று,
“சுற்றாது” என்று பதில் சொன்னேன்.
“எப்படிப்பா உங்களுக்குத் தெரியும்?” என்றாள்.
இந்த கேள்வியையும் நான் எதிர்பார்க்கவில்லை.
“அதோட மூளையோட அமைப்பு அப்படிமா. நம்ம மாதிரி கிடையாது. சுத்தினாலும் மயக்கம் வராது.”
“எப்படிப்பா உங்களுக்குத் தெரியும்?”
மறுபடியும் என் பதில் மீது நம்பிக்கை இல்லை. நான் இந்த பேச்சை நிறுத்தப் பார்க்கிறேன். இவள் விடுவதாக இல்லை.
“போன ஜென்மத்தில நான் காக்காவா இருந்தேன். அதனால் எனக்குத் தெரியும்.”
“அப்ப நீங்களும் போய் இந்த மாதிரி Fanல உட்கார்ந்தீங்களாப்பா?”
நான் மின்விசிறி மீது அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து பார்த்தேன். ரசிக்கும்படியாக இல்லை. இருந்தாலும், “ஆமாம். உட்கார்ந்தேன்“ என்றேன்.
“உட்காருவதுக்கு முன்னாடியே தலை சுத்தாதுனு உங்களுக்குத் தெரியுமாப்பா?”
ஒன்று மட்டும் புரிந்தது. நான் இவளை கேள்வி கேட்க ஊக்கப்படுத்தியதில் இவளது கேள்வி கேட்கும் திறமை நம்பமுடியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
“ஏதோ போய் உட்கார்ந்தேன், நல்ல வேளை ஒன்னும் ஆகலை.”
“ஆனால் ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, அதை பண்ணக்கூடாதுனு சொல்லுவீங்களேப்பா?”
போன பிறவியில் நடந்த தவறுக்கு இப்போது குறுக்கு விசாரணை நடப்பது போல் உணர்ந்தேன். என்றோ அவளிடம் நான் இதே போன்று சில கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தியதும் நினைவுக்கு வந்தது.
“ஆமாம், ஆனால் நான் அப்ப ஒரு முட்டாள் காக்காவா பொறந்திருந்தேன்.”
பிரியா சிரித்தாள். அவளது அம்மாவும் கூட சேர்ந்து கொண்டார்கள்.
யோசித்துப் பார்த்தேன், அவளுக்கு பதில் அளிக்கும் முயற்சியில், கடந்த சில நிமிடங்களில் நான் காக்காவாக ஒரு அவதாரமே எடுத்து, மின்விசிறி மீது அமர்ந்து கொண்டிருக்கிறேன், அதுவும் ஒரு முட்டாள் காக்காவாக.
“அப்ப நான் என்னப்பா பண்ணிட்டிருந்தேன்?”
இவளுக்கு சென்ற பிறவியில், காக்கா, அணில் அவதாரம் கொடுத்து, இவளது கேள்விக்கணைகளை சந்திக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். நானொருவன் காக்காவாக மாறியது போதும்.
“நீ அப்போதும் இப்போது போல் குட்டி பிரியாவாக தான் இருந்தாய்!”
பிரியா கொஞ்சம் மௌனமாக இருந்தாள். கடைசியாக அவளது கேள்விகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டோம் என்ற அற்ப சந்தோஷத்தில் ஈடுபட நினைத்ததோடு சரி, பிரியா கூறியது காதில் விழுந்தது.
“அப்படின்னா நான் உங்கள காக்காவா பார்த்தேனா அப்பா?”
“பார்த்தாய், ஆனா காக்காவுக்கு தலை சுத்துமானுலாம் கேள்வி கேட்கல.”
“ஏன் கேட்கலப்பா?”
“ஏன்னா உனக்கு அப்ப இருந்த அப்பா, என்ன மாதிரி ஒரு முட்டாள் இல்ல”
பிரியாவின் அம்மா மறுபடியும் சிரித்தது காதில் விழுந்தது. நான் என்னை இதுவரை இரண்டு முறை முட்டாள் என்று சொல்லி இருந்தேன். இரு முறையும் தவறாமல் சிரிப்பு சத்தம் கேட்டது. பிரியாவின் அம்மாவை மகிழ்ச்சிபடுத்துவது இவ்வளவு எளிதான விஷயம் என்று இன்று வரை எனக்குத் தெரியாமல் இருந்ததே!
“அப்பா, நீங்க ஒன்னும் முட்டாள் இல்லப்பா. காக்காவா இருக்கும் போது மட்டும் தான் முட்டாளா இருந்தீங்க. அப்பாவா இருக்கும் போது புத்திசாலி தானேப்பா நீங்க”.
நான் காக்கா வேஷம் போட்டது வீண் போகவில்லை. கனவிலும் எதிர்பார்க்காத அங்கிகாரம். முதல் முறையாக சிரித்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வாய்ப்பு. பிரியாவைத் தூக்கி அணைத்தேன், அவளது அம்மா என்னைப் பார்க்குமாறு. அவளது அம்மா இந்த அங்கிகாரத்தில் உடன்பாடு இருப்பதாக காண்பித்துக் கொள்ளவில்லை.
இப்போது மின்விசிறி கிட்டதட்ட நின்றுவிட்டது. காக்காவுக்கு தலை சுற்றி இருந்தால், இந்நேரம் மயக்கம் வந்து கீழே விழுந்திருக்க வேண்டும். காக்கா சுற்றலில் எந்த பாதிப்பும் ஏற்படாத மாதிரி, நிலையாக நின்று உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. நானும் அந்த காக்காவின் கம்பீர பார்வையைப் பார்த்து பெருமைபட்டுக் கொண்டேன், ஏதோ போன பிறவியில் நான் உண்மையிலேயே காக்காவாக இருந்தது போல. எப்படியோ என்னுடைய யூகம் சரியாக இருந்தது. (இல்லாவிட்டால், அப்பாவுக்கு இன்னமும் ‘போன பிறவி முட்டாள் காக்கா’வின் மூளை தான் இருக்கிறது என்று முடிவு கட்டி இருப்பாள் பிரியா. தவிர சற்று முன் கிடைத்த அங்கிகாரமும் பறிபோயிருக்கும்).

முற்றிலும் நின்றுவிட்ட மின்விசிறியின் மீது வீற்றிருந்த காக்காவின் “உலக மேற்பார்வை” அங்கிருந்த பிரியா வயதில் இருந்த இன்னொரு சிறுவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. அவனுக்கும் இந்த ‘தலைசுற்றல்’ கதை தெரிந்திருந்தால் சும்மா இருந்திருப்பானோ என்னவோ? கையில் கொடுக்கப்பட்ட சுண்டல் பிரசாதத்தை கணைகளாக பயன்படுத்தி காக்காவினைக் குறி வைத்தான். உலக மேற்பார்வையில் மெய்மறந்திருந்த
காக்கா அந்த கணைகளைக் காணத் தவறியது. ஆனால் நல்ல வேளையாக் அவனது சுண்டல் கணைகளும் குறி தவறியது. அவன் முயற்சியைக் கைவிடுவதாகத் தெரியவில்லை. அவனது குறி வைக்கும் திறனும் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டுக் கொண்டு தான் இருந்தது.
இம்முறை அவனது கணை குறியை அடைந்திருக்கும், ஆனால் காகம் அவனுடைய முயற்சியைப் பார்த்துவிட்டது. உடனே மின் விசிறியை விட்டு பறக்கவும் செய்தது.

பிரியாவும் கண் சிமிட்டாமல் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்தாள், கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு. எனக்கும் சற்று ஓய்வு கிடைத்தது போல் இருந்தது. காகமும் இப்போது போய் எந்த சிறுவனும் குறி வைக்கமுடியாத வகையில் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டது. நாங்கள் மெதுவாக கோயிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். புயலுக்கு பின் அமைதி போல் தோன்றியது எனக்கு. வீட்டுக்குத் திரும்பிச் செல்ல ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தோம்.

“நீங்க காக்காவா இருந்தப்ப அம்மா என்னப்பா பண்ணிட்டு இருந்தாங்க?” என்று திடீரென கேள்வி வந்தது, படப்புதிரில் விடப்பட்ட கடைசி துண்டினை படத்தினில் ஒட்டுவது போல் இருந்தது எனக்கு.
“அம்மா தானே, அப்பவும் அதே கதை தான். என்ன விரட்டிட்டுதான் இருந்தாங்க. கோயில்ல பார்த்த பையனா இருந்தாங்க உங்க அம்மா” என்றேன்.
இந்த தடவையும் ஒற்றைச் சிரிப்பு சத்தம் கேட்டது, ஆனால் பிரியாவிடமிருந்து. அ துவரை நடந்த சம்பவங்களில், என் தாழ்ந்த தருணங்களில் மட்டும் சிரிப்பை உதிர்த்து மற்ற நேரங்களில் பார்வையாளராக இருந்த என் அருமை மனைவி,
“போன ஜென்மம், முட்டாள் காக்கா, விரட்டற அம்மா. நல்லாவே அறிவியல் சிந்தனை வளர்க்கறீங்க” என்றாள்.
நான் சிரித்தேன்.

-வினோத்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

Monday, September 26, 2005

ஒளி இலக்கணம்

oli

உலகம் சற்று வித்தியாசமாகத் தெரிந்து கொண்டிருந்தது. நான்கு வாரங்கள் இருட்டில். இன்றுதான் மறுபடியும் உலகத்தை பார்த்தான் கண்ணன். இருளிலிருந்து ஒளி – ஒரு மாதம் தான், ஆனால் நிறைய வேறுபாடு இருப்பது போல் தோன்றியது. மருத்துவமனையில் இருந்து ஒரு நானூறு அடி தான் நடந்திருப்பான். இன்னமும் வெறும் கட்டிடங்கள் தான் சுற்றி இருந்தன. மேலே வானத்தைப் பார்த்தான். வானத்தின் நீல நிறம் அவன் கண்களை நிறைத்தது. கண்களை மூடினான்.

“இயற்கையில் நிறங்கள் என்று எதுவும் இல்லை. ஒளிக்கு நிறங்கள் கிடையாது. Light has no colors, the defining property of light is only its wavelength. ஒரு குறிப்பிட்ட wavelength ஒளி கண்களில் ஏற்படுத்தும் உணர்ச்சி தான் அந்த ஒளியின் நிறம். Yes, கண்களின் உணர்ச்சி தான் நிறங்கள். Colors are only perceptions of the eye, ஆனால் ஒளிப்பதிவாளர்களான உங்களுக்கு, இந்த நிறங்கள் தான் இன்றியமையாதவை. these perceptions are what matter most….”
கண்ணன் விருது பெற்ற ஒளிப்பதிவாளன். கல்லூரி காலத்தில் ஒளிப்பதிவு பாடத்தில் இயற்பியல் பேராசிரியர் இராமன் எடுத்த சிறப்பு வகுப்பில் கூறியவை கண்ணனின் காதில் இப்போது ஒலித்துக் கொண்டிருந்தது. கண்ணன் பாலத்தின் திசையில் நடந்தான். பாலத்தில் நின்றால், கீழே ஓடும் நகர நதியின் மணத்தை சற்று சகித்துக் கொள்ளத்தான் வேண்டும், ஆனால் நகரத்தின் தொலை தூரங்களை அங்கிருந்து பார்க்கலாம். பாலத்தை அடைய சாலையைக் கடக்க வேண்டும். காலை ஏழரை மணிதான். ஆனால் போக்குவரத்து சற்று அதிகமாக இருந்தது. Signal-இல் பாலத்தைக் கடப்பதே சிறந்தது என்று Signal வரை நடந்தான்.

சாலை கடப்போருக்கு பச்சை விழுந்திருந்தது. கண்ணன் சாலையில் கால் வைத்தான். ஆனால் ஒரு லாரி கிட்டதட்ட அவன் மேல் ஏறியிருக்கும். சிக்னலில் நிற்காமல் லாரி அவனை கடந்து சென்றது. கண்ணன் பின் வாங்கி மறுபடியும் கடக்க முற்பட்டான். இந்த முறை ஒரு கார். எந்த வாகனமும் நிற்பதாகத் தெரியவில்லை. வாகனங்களுக்கான signal-ஐ பார்த்தான். சிகப்பு விளக்கு. இருப்பினும் ஒரு வண்டியும் அதை மதிப்பதாக இல்லை. இப்போது சாலையின் நடுவில் திணறிக் கொண்டிருந்த கண்ணனை சுற்றி வண்டிகள் சென்ற வண்ணமாக இருந்தன. கண்ணனுக்கும் மயக்கமே வந்து விட்டது. கண்ணன் கிட்டதட்ட கீழே விழுந்திருப்பான். இப்போது சாலை கடப்போருக்கான பச்சை சிகப்பாக வேறு மாறிவிட்டது. ஆனால் அதிசயமாக அவன் முன் வந்து கொண்டிருந்த கார் நின்றது. மற்ற வாகனங்களும் அதன் பின் நின்றன். அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு நின்றிருக்க வேண்டும். அவசரமாக சாலையைக் கடந்தான்.

பாலத்தை நோக்கி நடந்தான். பாலத்தை அடைவதற்கு முன் நகர நதியின் மணம் அவனை அடைந்தது. சகித்துக் கொண்டு நடந்தான். பாலத்தின் மேல் ஒரு பெண் உள்பட, நான்கைந்து பேர் கொண்ட குடும்பக் கும்பல் நின்று கொண்டிருந்தது.. அந்த கும்பலில் ஒருவன் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாலத்தின் ஒரத்தில் நின்று நதியைப் பார்த்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் வேறு திசையைப் பார்த்து தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தையைப் பார்க்க கண்ணனுக்கு பரிதாபமாக இருந்தது. குழந்தையால் இந்த நதியின் மணத்தைப் பொறுத்துக் கொள்ள முடியுமா என்று யோசித்தான். திடீரென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தவன், தன் கையை பின் கொண்டு வந்து, வேகமாகத் தன் கையில் இருந்த குழந்தையை நதியின் திசையில் தூக்கி எறி…..இதைப் பார்த்து கொண்டிருந்த கண்ணன் ஒரு நொடி திக்கு முக்காடினான். வேகமாக அவனை நோக்கி தலை தெறிக்க ஓட, கால் தடுக்கி கீழே விழுந்தான்……

காவல் நிலையத்தில்….
“Inspector, It was gruesome, கொடுமை - அவன் தான் குழந்தையைத் தூக்கி ஆற்றில் வீசினான்”
“ஆனால் அவர் குழந்தை கை தவறி விழுந்துவிட்டது என்றல்லவா சொல்கிறார்”
“இல்ல சார், அவன் நடிக்கிறான். தூக்கி எறிஞ்சான், நான் பார்த்தேன்.”
“என்ன உடை அணிந்திருந்தார்?”
“பச்சை சட்டை”
“இங்கே வாங்க, என்ன சட்டை போட்டுருந்தீங்க?”
“இதே சட்டை தான் சார். சிகப்பு சட்டை”, என்று அழுது கொண்டே சொன்னான். குடும்பத்தின் மற்றவர்களும் ஒப்பு கொண்டனர்.
கண்ணன் அவன் போட்டிருந்த சட்டையைப் பார்த்தான். அதே சட்டை தான். ஆனால் அவன் கண்ணில் இப்போதும் பச்சையாகத் தெரிந்து கொண்டிருந்தது.
“இது பச்சை இல்லையா?” என்றான் கண்ணன். திடீரென கண்ணனுக்கு பொறி தட்டியது. காலையில் வாகனங்கள் அவனுக்கு பச்சை வந்த போது நிற்கவில்லை. அவனுக்கு சிகப்பு விழுந்த போது வண்டிகள் நின்றன்.

வெளியே வேகமாக ஓடினான். மரத்தைப் பார்த்தான். மரத்தின் இலைகள் சிகப்பாகத் தெரிந்து கொண்டிருந்தது. திரும்பி காவல் நிலையத்தைப் பார்த்தான். காவல் நிலையம் பச்சை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. கண்ணனுக்கு இப்போது புரிந்தது.

பச்சை சிகப்பாகத் தெரிந்து கொண்டிருந்தது. சிகப்பு பச்சையாகத் தெரிந்து கொண்டிருந்தது.

*************

கண்ணன் அவசரமாக மருத்துவமனைக்குத் திரும்பி வந்தான்.
“Doctor, சிகிச்சைக்கு முன் என் பார்வை மங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது சிகிச்சையில் ஒரு பெரிய குளறுபடி நடந்திருக்கிறது. இப்போது சிகப்பு பச்சையாகத் தெரிகிறது. பச்சை சிகப்பாகத் தெரிகிறது. ஒரு கொலைகாரன் தப்பிவிட்டான்.” - கண்ணன் டாக்டரைப் பார்த்துக் கத்தினான்.

Dr.அறிவொளி கண்ணனின் கண்களை கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பரிசோதனை செய்தார்.

“கண்ணன், நான் சொல்வதை பதட்டம் இல்லாமல் கோபம் இல்லாமல் கவனமாகக் கேளுங்கள். நான் சொல்லப் போவது உங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம், ஆனால் அது உண்மை. Actually your eyes are perfectly alright now. உங்கள் கண்களில் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை.”

“Are you joking?” – கண்ணன் சற்று கோபமாகவே கேட்டான்.

“இல்லை. நான் சொல்வது உண்மை. ஆனால் உங்கள் கண்ணில் இந்த Color perception பிரச்சனை சிகிச்சைக்கு முன் இருந்தது. அதை என் சிகிச்சை எதிர்பாராத விதமாக சரி செய்துள்ளது”

“என்ன??? எனக்கு சிகிச்சைக்கு முன்னாடி எந்த பிரச்சனையும் இருந்ததில்லை, மங்கல் பார்வையைத் தவிர”

“நான் உங்களுக்கு அறிவியல் விளக்கம் கொடுத்து புரிய வைக்க முடியும். ஆனால் அதற்கு நான் சொல்வதை நீங்கள் நிதானமாக கேட்க வேண்டும்”.

“சரி சொல்லுங்க பார்ப்போம்.”

“உண்மையில் ஒளிக்கு எந்த நிறமும் கிடையாது. நிறம் என்பது கண்களில் ஒளி ஏற்படுத்தும் வெறும் உணர்ச்சி தான்.”
அறிவொளி கூறியது பேராசிரியர் இராமன் கூறியதை நினைவுகூர்ந்தது.

“ஒரு தக்காளிப் பழத்தோலில் இருந்து வெளிப்படும் 650nm wavelength ஒளி கண்களில் ஏற்படுத்தும் உணர்ச்சியை சிகப்பு என்கிறோம். அதே போல் கிளியின் உடம்பிலிருந்து வெளிப்படும் 510nm wavelength ஒளி கண்களில் ஏற்படுத்தும் உணர்ச்சியை பச்சை என்கிறோம். என் கண்ணில் இந்த wavelength ஒளி என்ன உணர்ச்சி ஏற்படுத்துகிறது என்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் கண்ணில் இந்த wavelength ஒளி என்ன உணர்ச்சி ஏற்படுத்துகிறது என்று எனக்குத் தெரியாது. ஒத்துக் கொள்கிறீர்களா?”
“சரி, தொடருங்கள்”
“ஆனால் கிளி பச்சை என்று நமக்குத் தெரியும். ஆதலால் நம் கண்ணில் கிளியின் ஒளி என்ன உணர்ச்சி ஏற்படுத்துகிறதோ, அதை பச்சை என்கிறோம். உங்களுக்கு பிறந்ததிலிருந்து உங்கள் கண்ணின் அமைப்பு, கிளியின் ஒளியை நாங்களெல்லாம் உணரும் சிகப்பு நிறமாக காட்டிக் கொண்டிருந்தது. அதே போல் தக்காளியின் ஒளி நாங்களெல்லாம் உணரும் பச்சை நிறத்தை உங்கள் கண் உங்களுக்கு காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. கிளி சிகப்பாக உங்கள் கண்ணில் தெரிந்தாலும், அதை நீங்கள் பச்சை நிறம் என்று நினைத்திருந்தீர்கள். தக்காளியும் நெருப்பும் உங்கள் கண்ணில் பச்சையாகத் தெரிந்தாலும், அதை நீங்கள் சிகப்பு என்று குறிப்பிடுவதால் எந்த குழப்பமும் இல்லை”
“I cant believe this.”
“I understand your feelings. ஆனால் அதுதான் உண்மை. இப்போது கண்ணில் நான் செய்த சிகிச்சையில் Retina செல்களை மாற்றி இருப்பதால், எல்லோரைப் போல் உங்கள் பார்வையை மாற்றிவிட்டோம். இப்போது கிளியும் புல்லும் உங்கள் கண்களில், எல்லோரும் உணரும் பச்சை நிறத்தில்தான் இருக்கும். அதே போல் தான் ஆப்பிளின் நிறமும் நாங்கள் உணரும் சிகப்பில் இருக்கும். இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் உலகு தான் நாங்கள் இத்தனை நாள் வரை பார்த்த உலகம்.”
“அப்படியானால், ஒரு ஒளிப்பதிவாளனாக நான் பார்த்த உலகமும் என் ஒளிப்பதிவில் காட்டிய உலகமும் வேறா?”
“Yes, Incredible, but true. Truth sometimes sounds like a fantasy, doesn’t it? In fact you are the first diagnosed and cured case of this color swap disorder.”
“இப்போது என் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?”
“நீங்கள் சிகப்பு என்று நினைக்கும் நிறத்தை பச்சை என்று அழையுங்கள். பச்சை என்று நினைக்கும் நிறத்தை சிகப்பு என்று அழையுங்கள். கலப்பு நிறங்களுக்கு புது சொற்களைக் கற்றுக் கொள்ளுங்கள். Don’t worry, it is only a terminology confusion!
கண்ணன் யோசித்தான். பிரச்சனை சிகிச்சைக்கு முன் ஏற்பட்டிருந்தால், டாக்டரின் அறிவியல் விளக்கம் சரிதான். ஆனால் அவருடைய சிகிச்சையினால் ஏற்பட்டிருந்தால்? புல்லினை உலகம் பார்க்கும் நிறம், நான் பார்த்த முந்தைய நிறமா? பார்க்கும் இப்போதைய நிறமா? எதுவாக இருந்தாலும் இனி இது வெறும் சொல் பயன்பாட்டு பிரச்சனை, yes, a problem of terminology.

கண்ணன் வெளியே சென்றான். செம்புல் தோட்டங்களும், பைங்கல் கட்டிடங்களும், கைக்குழந்தை கொலைகாரர்களும். உலகம் வித்தியாசமாகத் தான் இருந்தது.

-வினோத்
பி.கு: இக்கதை தினமலர் "அறிவியல் அயிரம் & டாட் காம்" பகுதியில் குறிப்பிடப்பட்டது. நன்றி தினமலர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

Thursday, September 15, 2005

Phone-A-Friend

“Phone-A-Friend” – என்றான் மதி பதட்டம் தென்பட்ட நடுங்கிய குரலில், சற்று அதிகமாகவே வியர்த்திருந்த முகத்துடன்.

கூட்டத்தின் வியப்பொலி அரங்கத்தை அதிர வைத்தது.

ஆட்டத்தின் முதல் துருப்புச் சீட்டை மதி பயன்படுத்தியிருந்தான்.
கேள்வியின் எண் 15 – ஒரு கோடி ருபாய்க்கான கடைசி கேள்வி.

இதுவரை மதி எந்த துருப்புச் சீட்டையும் பயன்படுத்தவில்லை. யாருடைய உதவியும் தேவை இல்லாதவன் போலல்லவா ஆடிக்கொண்டிருந்தான்! ஒவ்வொரு கேள்விக்கும் செருக்கும், திமிரும் கலந்த தோரணையில் சரியான விடைகள்! தன்னுடைய ஆட்டத்தின் மூலமாக பார்வையாளர்களுக்கு கடுப்பும் களிப்பும் ஒரு சேர ஏற்படுத்தி இருந்தான் மதி. மதியின் நினைவாற்றலையும் அறிவையும் கண்டு, போட்டியின் நடத்துனராக விளங்கிய இந்தியாவின் பெருநடிகர்கூட பெரும் வியப்பில் தான் இருந்தார்.

இறுதிக் கேள்வியின் போது மதி துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவதை பார்வையாளர்களால் நம்ப முடியவில்லை. உண்மையில், மதி பதிலளித்த விதம், மதிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு ஊடல்-கூடல் உறவினை ஏற்படுத்தியிருந்தது என்றால் மிகையாகாது. எடுத்துக்காட்டாக, சற்று நேரம் முன்னர், ஐந்தாவது கேள்வியின் போது மதி கூறியது அவனுக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவாளர்களை உருவாக்கவில்லை.

கேள்வி:
குடியரசு இந்தியாவுடன் கடைசியாக இணைந்த பகுதி எது?
A) கோவா, தாமன் மற்றும் தையு
B) தாத்ரா நகர் மற்றும் அவேலி
C) சிக்கிம்
D) புதுவை

மதி சற்று யோசித்ததைப் பார்த்து உயர பெருநடிகர்,
“உங்களிடம் இன்னமும் மூன்று துருப்பு சீட்டுகள் உள்ளன, நண்பரிடம் தொலைபேசலாம், 50-50, இல்லையேல் இதோ பார்வையாளரிடம் கேட்கலாம்” என்றார்.
“எனக்கே தெரியவில்லை என்றால் பார்வையாளர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதாவது உருப்படாத இந்தி சினிமா கேள்விக்கு வேண்டுமானால் அவர்கள் பதில் சொல்லுவார்கள்”, என்றான் மதி இந்தியில், கூட்டத்தின் கோபக் கூக்குரலுக்கு இடையே.

உண்மையில் பெருநடிகருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“என்னையும் என்னைப் போன்ற ஏராளமான கலைஞர்களை உருப்பட வைத்த இந்தி சினிமாவைப் பற்றி இப்படி சொல்கிறீர்களே, மதி. இருந்தாலும் இந்தி சினிமாவைப் பற்றி உங்களுடைய கருத்தை வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி” என்று சிரித்துக் கொண்டே தன் கம்பீரத் தோரணையில் சமாளிக்கப் பார்த்தார். “சரி என்ன பண்ணலாம் என்று இருக்கிறீர்கள், பார்வையாளர் உதவி வேண்டாம் என்றால்?”. நிதானமாக யோசித்து “99% நம்பிக்கையுடன்” பதிலளிப்பதாகக் கூறி ஒரு விடையைத் தந்தான்.
“சிக்கிம், 1975இல்”.
அது நூறு விழுக்காடு சரியாக இருந்தது.

உண்மையில் ஐந்தாவது கேள்வி வரை கூட்டம் மதிக்கு அமோக அதரவு அளித்து வந்தது. காரணம், மதி தன்னை பற்றிக் கொடுத்த அறிமுகமும், அவனது திட்டமும். “உழவன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மதி, இந்திய அறிவியல் நிறுவனத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மரபணு உயிரியலில் முதுநிலை பட்டம் பெற்றவன்!

“வானம் பார்த்த காய்ந்த நிலங்களையும், நிலங்களின் விளைவைப் பார்த்த காய்ந்த வயிறுகளையும் கொண்ட ஒரு மறக்கப்பட்ட ஊர் என்னுடைய ஊர், செங்கதிர்” என்று மதி சொன்னது அங்கிருந்த பல காய்ந்த கண்கள் ஈரமடையச் செய்தது. இந்தியாவை மிதிவண்டியில் சுற்றி எதேனும் நான்கு எல்லைகளில் கால் பதிப்பதைத் தன் “சின்னப் பேராசை”யாகக் கொண்ட மதி, ஆய்வுப் படிப்பிற்கு சியாட்டில் செல்லாமல், செங்கதிரில் தங்கி தன் ஊரை வறுமையின் பிடியில் இருந்து விடிவிக்க தான் முயற்சிப்பதாக சொன்னபோது, கூட்டம் எழுந்து நின்று கைதட்டியது.

“நான் இந்த போட்டியில் ஒரு கோடி ஜெயிக்கத் தான் விளையாடுகிறேன். எனக்காக இல்லை இந்த பணம். என் ஊரின் முன்னேற்றத்துக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களுக்கு ஒரு கோடி கண்டிப்பாகத் தேவை” என்று திட்டவட்டமாக அறிவித்தான். அடிப்படை வசதிகளும் பணபுழக்கத்தைத் திரும்ப ஏற்படுத்தும் ஒரு வணிகச் சூழலை உருவாக்கப் போவதாக கூறினான்.

“செங்கதிரின் விடியலுக்கு இந்த ஒரு கோடி” என்று மதி கூறிய வார்த்தைகள் பலருக்கு புல்லரிப்பு ஏற்படுத்தினாலும், அவன் வார்தைகளில் கொஞ்சம் திமிரும் செருக்கும் கலந்திருப்பதாகவே சிலருக்குப் பட்டது. ஐந்தாவது கேள்வியின் போது அவன் கூறியது அதனை உறுதி செய்தது.

ஆனால் கூட்டத்தின் கோபம் நிரம்ப நேரம் நீடிக்கவில்லை. பத்தாவது கேள்வி வரும் போதே, மதியின் விடைகள் அவனது அறிவாற்றலை அனைவருக்கும் உணர்த்தியது. அவனது உயர்ந்த நோக்கத்தை நினைவுகூர்ந்த கூட்டம் மறுபடியும் அவன் பக்கம் சாய்ந்தது. பதினைந்தாவது கேள்விக்கு முன் “மதி, மதி” என்று கூட்டம் அவனுடைய பெயரைக் கத்திக் கொண்டிருந்தது.

கேள்வியை பெருநடிகர் படிக்க, திரையில் தோன்றியது.
தன்னுடைய மருத்துவ படிப்புக்கு நடுவே, இவர் “Le Pedorasa” என்ற தன்னுடைய மோட்டர் சைக்கிளில் தன் கண்டம் எங்கும் பயணம் செய்தார். இவர் மேற்கொண்ட பயணம், பிற்காலத்தில் நிகழ இருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்களுக்கு வித்தாக அமைந்தது. இவர் யார்?
A) Diego Rivieria
B) Che Guevera
C) Lech Walesa
D) Fidel Castro

“உங்களுக்கு நினைவுபடுத்தக் கூறுகிறேன் – இன்னமும் மூன்று துருப்பு சீட்டுகளும் அப்படியே இருக்கின்றன. விலகினால் 50 இலட்சம் உண்டு – ஆனால் செங்கதிருக்கு 1 கோடி தேவை என்று ஏற்கனவே கூறிவிட்டீர்கள். சந்தேகம், குழப்பம் இருந்தால், துருப்பு சீட்டுகளை பயன்படுத்துங்கள்”.

மதி கண்டிப்பாக பார்வையாளர் பதிலைக் கேட்கமாட்டான் என்று அனைவருக்கும் தெரியும். என்ன இருந்தாலும், பதினைந்தாம் கேள்வி என்றைக்குமே பார்வையாளர் கேள்வி கிடையாது. மதி நிரம்ப நேரம் கழித்து தன் முதல் துருப்புச் சீட்டை பயன்படுத்தினான்.
“யாரை அழைக்க விரும்புகிறீர்கள்?” என்றார் பெருநடிகர் தன் கணீர் குரலில்.
“குமாரசாமி from செங்கதிர், என்னோட அப்பா” என்றான்.

“குமாரசுவாமிஜி, मै ... बोल रहा हू, कौन बनेगा क्रोरपति से|”
“யார் நீங்க, உங்களுக்கு யாருங்க வேணும்?”
“Sir, he does not know hindi”.
“That’s okay Madhi, but I do know tamil. ரஜினிகாந்த், கமல்ஹாசன், நம்ம தோஸ்த். Your father has asked me something. யார் நீ, Who are you? That’s the question, correct? In fact I am quite pleased to answer his question, for the question is something that I am not often asked, atleast in these parts of the world. Let me give a brief bio – நான் உருப்படாத இந்தி சினிமாவில் ஒரு உருப்படாத நடிகர்.”
கூட்டம் சிரித்தது. மதி சிரிக்கவில்லை, அவன் இன்னமும் கேள்வியில் மூழ்கி இருந்தான். பதட்டத்துடன் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தான்.
“என்ன புள்ளே சார் பெத்தர்கீங்க, என்ன answer சொல்றார்? என்ன பெரிய thoughts? நான் உங்கள சல்யூட் பண்றேன்! அரே வா” என்றார் நெகிழ்ச்சியுடன் குமாரசாமியிடம்.
“இப்ப உங்க பையன் உங்க help கேட்கறார், 50 lakhs win பண்ணிருக்கார்,செங்கதிர் needs another 50 lakh, அது உங்க கையிலே. Your time starts now!” என்று விரலசைத்தார்.

“எப்படிடா இருக்க மதி?”
“நல்லா இருக்கேன்பா, இதோ கேள்வி”
மதி கேள்வியைப் படிக்கத் தொடங்கினான். அவன் குரலின் நடுக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.


கேள்வியைப் படித்து முடிப்பதற்குள் 15 விநாடிகள் முடிந்துவிட்டன். மதி தொடர்ந்தான்.

“நான் இந்த கேள்வியை உங்க பதிலுக்காக கேட்கல. உங்ககிட்ட பேசணும் போல இருந்தது. என்னாலயே நம்ப முடியலப்பா. செங்கதிருக்கு விடியல் பொறந்தாச்சுப்பா. எனக்கு இந்த கேள்விக்கும் பதில் தெரியும்பா. MotorCycle Diaries. விடை Che Guevera.” என்று மதி தழுதழுத்தக் குரலில் சொல்லி முடிக்க, கூட்டம் மறுபடியும் எழுந்து நின்று கை தட்டத் தொடங்கியது.

“உங்கள் பதிலில் நம்பிக்கை தெரிகிறது. Lock செய்யலாமா?” என்றார் பெருநடிகர் தன் அதிரும் குரலில், மின்னும் வியர்வை முகத்துடன் அமர்ந்திருந்த மதியைப் பார்த்து.
-வினோத்
பி.கு: KBCயின் முன்னொடியான Who wants to be a millionaire? நிகழ்ச்சியின் முதல் Millionaire-ஆன John Carpenter வெற்றி பெற்ற நிகழ்ச்சியின் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்ட கற்பனைக் கதை இது. John Carpenter வருமான வரி அதிகாரி, ஆதலால் கூட்டத்தின் ஆதரவு இல்லாமல் ஆடினார். தன் முதல் Lifeline- Phone-A-Friendஐ ஆட்டத்தின் கடைசி கேள்வியின் போது பயன்படுத்தித் தன் தந்தைக்கு தன் வெற்றியை அறிவித்தார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

Thursday, August 18, 2005

வேட்டையாடு! விளையாடு!!!வேந்தர் விலாடிமிர் வீழ்ந்தார்! வேந்தர் வேலன் வாழ்க!!
இராணியை அந்த இடத்துக்கு கொண்டு வந்தவுடன், வேந்தர் விலாடிமிரின் பதினைந்து வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் என்று வேலனுக்குத் தெரியும். மேற்கண்ட வரிகளை நாளைய நாளிதழ்கள் அலறும். இந்த நாளுக்குத் தான் கடந்த ஐந்து வருடங்களாக போராடிவந்தான். பன்னிரண்டு சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் வேலனின் வாழ்க்கைக் கனவை நனவாக்கிவிட்டது. விலாடிமிர் கைகுலுக்கியபோது வேலன் மகிழ்ச்சி மேகங்களில் மிதந்தான். ஆனால் விலாடிமிர் அவனிடம் கூறிய வார்த்தைகள் அவனைத் தரைக்கு கொண்டு வந்தன.

“Bad day” என்றார் விலாடிமிர். “How about tonight?”

உலகத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் செய்தி நிருபர்களுக்கும் பேட்டி அளிக்கும்போதுகூட விலாடிமிரின் கடைசி வார்த்தைகள் தான் வேலன் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. வேலன் வாழ்த்துகளுக்கு நன்றி கூறிவிட்டு அடுத்த நாளுக்குப் பேட்டியை ஒத்திவைத்தான்.

“உனக்கென்ன பைத்தியமா? உனக்கு தான் அவரைப் பத்தி தெரியுமே. ஒத்துகிறேன், அவர் ஒரு மேதை தான், ஆனால் அதே சமயத்தில ஒரு வெறியர். உலகமே இந்த நாளுக்குத் தான் காத்துக் கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை ஆட்டம் முடிந்துவிட்டது. I think he is an obsessed eccentric….” – என்றுக் கூறிக் கொண்டிருந்தார் வேலனின் சக வீரரும் பயிற்சி நண்பருமான ஆனந்தன்.

விலாடிமிர் பதினைந்து வருடங்களாக சதுரங்க உலகின் முடிசூடா மன்னராக விளங்கினாலும் செய்தி உலகிலும் சரி, சதுரங்க உலகிலும் சரி, அவருக்கு அவ்வளவாக நல்ல பெயர் இல்லை என்பதுதான் உண்மை. தொடர் வெற்றியினாலோ என்னவோ? அவர் ஒரு கிறுக்கு பிடித்த மேதை, முதலிடம் மீது வெறி பிடித்தவர் என்ற கருத்தே நிலவியது. அதற்கு பல சம்பவங்களும் கட்டுக்கதைகளும் உலவி வந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது ஐந்து வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம்…

விலாடிமிர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஆட்டத்தில் தோல்வியுற்றார். ஆட்டத்தின் முடிவில், தோல்வியோடு அவருடைய மனைவியின் மரணச் செய்தியும் வந்து சேர்ந்தது. மனைவியின் உடல் முன் நின்ற விலாடிமிர் உணர்ச்சியற்று சிந்தனையில் மூழ்கிப் போனாராம். நீண்ட நேரம் நின்ற பிறகு திடீரென சொன்னார் – “QxC5 தவறான ஆட்டம்” என்று. பிறகு தான் அழுதிருக்கிறார். அவரை “வேந்தர் விலாடிமிர்” என்று அழைத்ததைவிட “சதுரங்க சாத்தான்” என்று அழைத்த கூட்டமே அதிகம்.

ஆனால் வேலனைப் பொறுத்தவரை, விலாடிமிர் தான் வேலன் என்ற ஏகலைவனுக்குத் துரோணர். அவருடைய அபார ஆட்டங்களும் விளையாட்டு முறைகளும் கண்டு அவன் எத்தனையோ முறை வியந்ததுண்டு. வேலன் தன் சிறு வயதில் முதன்முதலில் விலாடிமிரை சந்தித்த நாள் நினைவுக்கு வந்தது. அவனுடைய வாழ்வில் மறக்கமுடியாத நாள். விலாடிமிரை பற்றி நிலவிய கருத்துகளுக்கு மாறாக, அவர் வேலனிடம் அவனை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார். ஒரு முழுமணி நேரம் அவனோடு செலவிட்டார். பல ஆட்ட நுணுக்கங்களைச் சொல்லித் தந்தார். அது மட்டுமில்லாமல் அவனிடம் ஒரிரு வார்த்தைகள் தமிழில் பேசி அவனை வியப்பில் ஆழ்த்தினார். வேலனுக்காகவே அவர் கற்றிருக்க வேண்டும். விலாடிமிரின் மென்மையும் மேதைமையும் வேலனின் இளநெஞ்சை வெகுவாக கவர்ந்தது.

இன்று வேலன் தன் குழந்தைப் பருவ கனவு நாயகனை வீழ்த்திவிட்டான். அதிகாரப்பூர்வ பட்டியலின்படி வேலன்தான் சதுரங்க உலகத்தின் புது அரசன். ஆனால் விலாடிமிர் கூறிய வார்த்தைகள், அவர் வேலனின் வெற்றியை அங்கீகரிக்கவில்லை என்று காட்டியது. வேலனைப் பொறுத்தவரை விலாடிமிர் ஒப்புக்கொள்ளாதவரை அவன் எந்த வெற்றியையும் பெறவில்லை. ஆட்டம் முடியவில்லை. இரவு ஆட்டத்துக்கு ஒப்புக் கொண்டான்.
………………


மாஸ்கோவின் கடுங்குளிர் இரவு. வேலனும் விலாடிமிரும் வேட்டைக்குள் நுழைந்தனர். “வேட்டை” என்று உருசிய மொழியில் அழைக்கப்பட்ட அந்த இடம், மாஸ்கோ நகரின் ஓரளவு புகழ்பெற்ற இரவு நேரக் குழுமிடம். அவர்கள் உள்ளே நுழைந்த வேளை, ஆட்டமும், பாட்டமும் வேட்டை எங்கும் நிறைந்து இருந்தது. பரவி இருந்த இசையும் புகையும் நடுவே புகுந்து, கூட்டம் சற்று குறைவாக இருந்த ஒரு மூலையில் வேலனும் விலாடிமிரும் அமர்ந்தனர். எங்கு காணினும் மயங்கிய முகங்கள். ஆங்காங்கே பெண்கள் நடமாடிக் கொண்டிருந்தனர், ஆங்காங்கே நடனமாடிக் கொண்டிருந்தனர். விலாடிமிர் தன் பார்வையை எங்கும் உலவ விட்டார்.
நாணம் பழகாப் பெண்கள்” என்றார் உருசிய மொழியில். சொல்லிவிட்டு வேலனைப் பார்த்து பெருஞ்சிரிப்பு சிரித்தார். வேலன் இயந்திர புன்னகைத்தான். வேலனுக்குத் தான் சொன்னது புரிந்திருக்காது என்பதை உணர்ந்தது போல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார், அந்த பெருஞ்சிரிப்பையும் சேர்த்து. சிரிப்பு அங்கிருந்த ஒலிக்குழப்பத்தில் கரைந்தது. காலையில் ஆட்டத்தைத் தோற்ற போது அவர் முகத்தில் தென்பட்ட கலவரம், கோபம், குழப்பம் யாவும் இப்போது காணாமல் போயிருந்தன. ஒரு புது தெளிவு பிறந்திருந்தது. விலாடிமிர் சதுரங்கப் பலகையை விரித்தார். அங்கிருந்த கூட்டத்தில் சிலர் இதனைக் கவனித்துவிட்டனர். வேலனையும் விலாடிமிரையும் அடையாளம் கண்டு கொண்டனர். வேட்டையின் முழுக் கூட்டமும் ஆட்டம் பாட்டத்தை நிறுத்திவிட்டு இப்போது அவர்களை சூழ்ந்து கொண்டது. வேட்டையின் வரலாற்றிலேயே முதன்முறையாக அமைதி நிலவியது, இத்தனை பேர் இருந்தும்.
“ஆட்டத்தை தொடங்கலாமா?” என்றான் வேலன்.
“தொடங்கலாம். ஒரு நிமிடம்.” என்று சொல்லிவிட்டு கூட்டத்தின் பக்கம் திரும்பினார் விலாடிமிர். “நாங்கள் வந்தது வெறும் விளையாட்டுக்கு இல்லை! வேட்டைக்கு!!” என்றார். கூட்டம் ஆரவாரித்தது. விலாடிமிர் கையசைத்தார். ஆட்டமும் பாட்டமும் மறுபடியும் தொடங்கியது. வேட்டை தன் பழக்கப்பட்ட சூழ்நிலைக்குத் திரும்பியது.

வெள்ளை அணியின் ஆட்டத்தை விலாடிமிர் துவக்கினார். வேலனுக்கு விலாடிமிரின் திட்டம் புரிந்துவிட்டது. உள்ளே நுழையும் வரை வேட்டைதான் ஆடுகளம் என்று வேலனுக்குத் தெரியாது. வேலன் ஆடுகளத்தில் அமைதியை எதிர்பார்ப்பான் என்று உலகத்துக்கே தெரியும். ஆரம்ப காலங்களில் சிந்திக்கும் போது ஒரு ஊசி விழும் சத்தம் கூட அவனுக்கு பிடிக்காது. வேலனின் சிறுவயதில் அவனது தாய் இதனைப் பயன்படுத்திக் கொண்டு அவனை இருபத்து நான்கு மணி நேரமும் சதுரங்கத்தைப் பற்றியே எண்ணாமல் இருக்கச் செய்ய, தொலைக்காட்சியையோ வானொலியையோ சத்தமாக வைப்பார்களாம். இதனால் சதுரங்கச் சிந்தனைத் தடைபட்டு மற்றவற்றிலும் கவனம் செலுத்துவானாம். காலப் போக்கில் வேலன் ஒரளவு சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டான். சுற்றுப்புற சூழலைத் தாண்டி தன் கவனத்தை விளையாட்டில் செலுத்தக் கற்றுக் கொண்டிருந்தான். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் என்றுமே சதுரங்கம் ஆடியது கிடையாது. ஆனால் இன்றைய ஆட்டம் ஆட்டங்களின் ஆட்டம். எந்த கவனச் சிதறலுக்கு இடம் கிடையாது. சூழலை மறந்து தனக்குள் அமைதியை தேட முயன்றான். பொறுமையாக ஆடத் தொடங்கினான்.

விலாடிமிரோ வேலனுக்கு முற்றிலும் மாறாக இருந்தார். உலகம் இதுவரைக் காணாத விலாடிமிரைக் கூட்டம் கண்டது. அவர் விளையாட்டில் அவ்வளவு கவனம் செலுத்துவதாகத் தென்படவில்லை. தன்னுடைய ஆட்டத்தின் பொழுது மட்டும் இருக்கையில் அமர்ந்தார். மேற்கத்திய இசைக்கேற்ப உடலையும் தலையையும் ஆட்டிக்கொண்டே தன் சதுரங்க ஆட்டத்தை ஆடினார். வேலனின் ஆட்ட நேரத்தில் கூட்டத்தில் கலந்தார். அலறிக் கொண்டிருந்த பின்னணியிசைக்கேற்ப நடனம் ஆடினார். அவ்வப்போது வெறித்தனத்துடன். தன் பல வருட ஆட்சிப் பொறுப்பை இறுதியாக தன் தலையில் இருந்து இறக்கி வைத்த அரசனின் களிப்பு அவரது கொண்டாட்டத்தில் தெரிந்தது. உண்மையில் அவர் நன்றாகவே விளையாடிக் கொண்டிருந்தார். இரவு நீள நீள, இருவரும் சரி சமமான நிலையில் தான் இருந்தனர். இருப்பினும் காலை உண்மையிலே “Bad day” என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார். விளையாட்டில் மட்டுமல்ல நடனத்திலும் தன் தேர்ச்சியை நிரூபித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த பெண்கள் அவரது நடனத்தில் மயங்கினர்.
என்னை வேட்டையாடுகிறாயா?” - அவரிடம் கெஞ்சினாள் ஒரு நாணம் பழகாப் பெண்.
“வேந்தனைக் கேட்பதற்கு முன் துறவியைக் கேள்” – என்றார் வேலனைப் பார்த்துக் கொண்டே பெருங்குரலில், அந்த பெருஞ்சிரிப்பை மறக்காமல்.
“நீ?” – என்றாள் இந்த முறை நாணத்துடன்.

வேலன் பலகையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான், தன் கவனத்தைச் சிதறவிடாமல். ஒரு முறை கூட இதுவரை அவன் இருக்கையிலிருந்து நகரவில்லை. இரவின் நீளமும் அதிகரித்துக்கொண்டு தானிருந்தது. இன்னமும் எவருக்கும் வெற்றி தோல்வி ஏற்படாத நிலை. வெள்ளையில் ஒரு யானை, ஒரு இராணி, நான்கு சிப்பாய்கள், ஒரு அமைச்சர். வேலனிடம் ஒரு யானை, ஒரு குதிரை, ஒரு இராணி, ஐந்து சிப்பாய்கள்…

அருகில் வந்த நாணப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தான். தான் பழக்கி வைத்திருந்த இயந்திர புன்னகையை சிந்த முற்பட்ட போது, வேலனுக்கு ஒரு பொறி தட்டியது. வேலன் தன்னிடம் இருந்த யானையை வெட்டு கொடுக்கும் நிலையில் வைக்க முடிவு செய்தான். வெள்ளை இராணி தன் யானையை வெட்டுமாறு அதன் பாதையில் வைத்தான். இன்னும் எண்ணி இருபது ஆட்டங்களில் அவனுக்கு வெற்றி. அவனுடைய சிந்தனையை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டான். விலாடிமிரை பகலிலும் வென்றோம், இன்று இரவிலும் வென்றோம், அதுவும் அவரது குகையிலேயே. அதுவரை அமைதியாக இருந்த வேலன் காற்றில் கையைக் குத்தினான். இவனுடைய திட்டத்தை முழுவதுமாக விலாடிமிர் புரிந்து கொண்டால், இப்போதே அவனிடம் கைகுலுக்கிக் கொள்ளலாம்.

விலாடிமிர் தன் கையை முன் கொண்டு வந்தார். வேலன் கைகுலுக்க வந்தான். கைகுலுக்காமல் வேகமாக அவனது கையைத் தட்டிவிட்டார். வேலன் திடுக்கிட்டு விலாடிமிரின் முகத்தைப் பார்த்தான். மனதில் ஒரு வித அச்சம் பரவியது. விலாடிமிர் புன்னகைத்துக் கொண்டிருந்தார். வேலன் பலகையை மறுபடியும் பார்த்தான். விலாடிமிர் இராணியை எடுத்தார். உண்மையில் எடுக்கவில்லை. எடுப்பது போல் நடித்தார். யானையின் இடத்தில் வைப்பது போல் கையை நகர்த்தினார்…QxB3..பிறகு வேலன் சார்பாக ஆடுவது போல் அவனுடைய இராணியைக் கொண்டு வருவது போல் செய்ய…Qe2+.. பிறகு தனது வெள்ளை இராஜாவை...Kg1.. தன் விரல் நகர்த்தலாலே தன் சிந்தனையோட்டத்தை படம் பிடித்துக்காட்டத் தொடங்கினார், பின்னணியிசைக்கேற்ப. இசையின் வேகம் அதிகரிக்க அவரது விரல் நகர்த்தலின் வேகமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டிருந்தார். வேலனுக்கு ஏற்பட்ட அச்சம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு காவியத்தை படைக்கும் இசையமைப்பாளன் போல், ஒரு அற்புதத்தை நிகழ்த்தும் மந்திரவாதி போல், இசையுடன் கூடிய அவரது விரல் கை அசைவுகள் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

3..c4! 4.Qc3Qxd1+5.Kf2(தோற்க-5Kh2 Nf6! 6Qxc4 Kg6!! 7. Qc6 Qxd5 8. Qxa6 Qf3.. 9. Qc4 Ng4 + 10 Kg1 Qf2 + 11 Kh1…..).. 5.. Nf6! 6.Qxc4 Kg6!! 7. Qc6 (தோற்க- 7.Bb2 Ng4+)……

வேலன் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். எந்த ஆட்டப் பாதையை எடுக்கலாம், எதை எடுத்தால் தோல்வி என்று அனைத்தும் கையசைவில். விலாடிமிர் இறுதியில் ஆடினார்….

வேலன் தான் அஞ்சியது நடந்துவிட்டது என்பதை உணர்ந்தான். வேலன் சதுரங்க பலகையை பெரும் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தான். நம்ப முடியவில்லை. எப்படி இப்படி ஆடினோம். கவனச் சிதறல். கைகுலுக்கிய மறுநிமிடம் விலாடிமிர் எழுந்து நின்று இரு கைகளையும் பரப்பி மேல் நோக்கினார். கூட்டம் விலாடிமிரைக் கையில் ஏந்தியது. வேலன் கண்களை மூடிக்கொண்டான். “வேட்டை முடிந்தது” என்று விலாடிமிர் அங்கிலத்தில் கூட்டத்திடம் கூறினார். “வேந்தர் வீழவில்லை! விலாடிமிர் வாழ்க!” என்ற கூட்டத்தின் பேரொலி காதில் விழுந்தது போல் இருந்தது. வேலனால் இனியும் சூழலை மறந்து இருக்க முடியவில்லை. ஆட்டம் முடிந்தது. கிளம்பினான்.
………………


கிட்டத்தட்ட விடியற்காலை. வேலன் தன் அறையில் உறக்கமின்றி படுத்திருந்தான். இன்னமும் தோல்வியின் குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தான். காலையின் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. பதினோரு சுற்றுகள் பிறகு சரிசமமான நிலையில் இருக்க, நிர்ணயிக்கும் 12-ஆம் ஆட்டத்தில் அற்புதமாக ஆடி வென்றது, விலாடிமிரின் “Bad day” கூற்று எல்லாம் நினைவில் வந்து போயின. இரவில் விலாடிமிரின் வேட்டை ஆட்டம். ஒரு நகர்த்தலில் ஏற்பட்ட கவனச் சிதறல். கறுப்பு இராணி 5e வில் இருக்க, வெள்ளை அமைச்சர் 1c வில் இருக்க, கறுப்பு சிப்பாய்கள் 5c, 5f, 6g வில் இருக்க… இல்லை நான் ஆடிய போது என் கறுப்பு சிப்பாய் 5gயில் அல்லவா இருந்த….தொலைபேசி மணி அவன் சிந்தனை ஓட்டத்தை நிறுத்தியது. எதிர் முனையில் விலாடிமிர்.
“வேந்தன் விலாடிமிர் வீழ்ந்தான், வேந்தர் வேலன் வாழ்க” என்றார் உருசிய செந்தமிழில்.

-வினோத்
பி.கு: இக்கதை முகமூடி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. போட்டியின் நடுவர் மாலனின் கருத்துகள் பின்வருமாறு:

"பொதுவாக தமிழ்ச் சிறுகதைகள் எடுத்துக் கொள்ளும் கதைக்களனிலிருந்து வித்தியாசமான ஒன்றைத் தேர்ந்து கொண்டிருக்கிறார் 'வேட்டையாடு விளையாடு' ஆசிரியர். மெருகேறிய நடை.சிறுகதையின் சாத்தியங்கள், அதன் வடிவம் அதன் ஆசிரியருக்கு விதிக்கும் வரம்புகள் இவற்றை விளங்கிக் கொண்டு, திறமையோடு அதைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். சதுரங்க ஆட்டத்தின் தொழில்நுட்பத் தகவல்களின் அளவு அதிகம். ஆனால் அதுதான் கதைக்கு ஒருவித authenticityயைக் கொடுக்கிறது. என்றாலும் சாதாரண வாசகன் அவற்றில் சலிப்படையக் கூடும்."

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

Monday, August 15, 2005

மங்கல் பாண்டே

நான்கு வருட இடைவேளைக்குப் பிறகு, நாடெங்கும் கொண்டாடப்படும் இந்தி நடிகர் நடிக்கும் படம். இரண்டு வருட உழைப்பு. 100 கோடி செலவு. விடுதலைக்கு ஏற்பட்ட முதல் எழுச்சிக்கு காரணமானவனின் கதை. அதிசயமாக படம் வெளியான இரண்டாவது நாளான இன்று, பெங்களூரின் திரையரங்கம் ஒன்றில் இரவு வேளை காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது. நாளை சுதந்திர தினம். சுதந்திரத்தைக் கொண்டாட ஒரு இந்திய சுதந்திர வரலாற்று படம். இந்தி தெரியாத என் பெற்றோரையும், இந்தி தெரிந்த நானும் என் தம்பியும், “இந்தி தெரியாது, ஆனால் புரியும்” என்று சொல்லும் எங்கள் நண்பருமாக ஐவராக படம் பார்க்க சென்றோம்.

“மங்கல், மங்கல்” என்று மங்கலம் பாடி படம் முடிந்துவிட்டது. படத்தில் ஒரு சில காட்சிகளைத் தவிர என் பெற்றோர்களுக்கு மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வரலாற்றுப் பாடத்தில் படித்ததுதான் படத்தின் கதை. “தன் மதக்கோட்பாடு மீறப்பட்ட காரணத்தினாலே தான், மங்கல் பாண்டே எதிர்த்தான், விடுதலைக்கு இல்லையே? அவனையேன் விடுதலை வீரன் என்கிறீர்கள்?” என்று என் வரலாற்று ஆசிரியரிடம் கேட்ட அறிவாளி(!) மாணவன் நான். என்னுடைய வரலாற்று ஆசிரியர் கேள்விக்கு சரியாக பதிலளிக்கவில்லை. படத்தின் முடிவுக் காட்சியில் இறப்பதற்கு முன்னால் “நான் விலங்கு கொழுப்பு பயன்பாட்டுக்காக தான் எதிர்க்கத் தொடங்கினாலும், இன்று நான் விடுதலைக்காக தான் எதிர்த்து நிற்கிறேன், மதக் கோட்பாடு மீறலுக்காக இல்லை!” என்று அமீர்கான் உணர்ச்சிப் பொங்க சொல்கிறார். இருந்தாலும் என் கேள்விக்கு சரியாக பதில் கிடைத்ததாக தெரியவில்லை என்றேன், வெளியே வந்தவுடன்.

“வரலாற்று படம், தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் படம் எடுத்திருக்கிறார்கள். வரலாற்று படத்தில் நிரம்பவும் கதை அளக்கவும் முடியாதே” என்றார் எங்கள் நண்பர். வேறு யாராவது விடுதலை வீரரின் கதை எடுத்திருக்கலாமே, இப்படி திரைக்கதையில் சம்பவங்கள் இன்றி தவித்திருக்க வேண்டாம், இராணி முகர்ஜியையும் அளவெடுத்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. இருந்தாலும் விளம்பரப் படுத்திய வகையைப் பார்த்து, விடுதலை வேட்கையை படம் சித்தரிக்கும் என்று எதிர்பார்த்து போனவன் நான். ஒரு காட்சியிலாவது உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியுடன் கூடிய “ஒரு புல்லரிப்பு, ஒரு மின் அலை”ஏற்படும் என்று காத்திருந்தேன். ஏற்படாதது ஏமாற்றம் தான் என்றேன். “நீங்கள் ஏன் இதை விமர்சனமாக உங்கள் வலைப்பதிவில் எழுதக் கூடாது?” என்றார் எங்கள் நண்பர். விமர்சனம் செய்யும் அளவுக்கு கருத்து சொல்கிறேன் என்று ஆங்கில, தமிழ் ‘இலக்கியப் பேரார்வம்’ கொண்ட மெத்தப் படித்த எங்கள் நண்பர் கூறியதை எண்ணி உள்ளூர இன்புற்றாலும், “நான் என் வலைப் பதிவில் சிறுகதை, குறுங்கதை, பெருங்கதை, வசனக்கவிதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை மற்றும் என் ஏனைய இலக்கிய படைப்புகளே(!) வெளியிடுவதாக ஒரு கோட்பாடு வைத்துள்ளேன்” என்றேன், என் தம்பிக்கு நக்கல் சிரிப்பு ஏற்படுத்தியவாறே.

வீடு திரும்பினோம். இந்தியா விடுதலை பெற்று முப்பது வருடங்கள் கழித்துப் பிறந்தவன் நான். விடுதலை என்றால் என்ன, வேட்கை என்றால் என்ன? அதற்கான போராட்டம் என்றால் என்ன? என்று நான் வரலாற்று புத்தகங்கள் மூலமும், அந்த காலத்து தூர்தர்ஷனில் அடிக்கடி ஒளிபரப்பிய சுதந்திரம் தொடர்பான கறுப்பு வெள்ளை படங்களின் மூலம் ஒரளவு புரிந்து கொண்ட காலங்கள் நினைவுக்கு வந்தது. இன்று சுதந்திர காலத்துக் கதைகள் திரைப்படத்தில் வருவதே அபூர்வம். தூர்தர்ஷன் இன்னமும் பழைய சுதந்திர கறுப்பு வெள்ளை படங்கள் காண்பித்தாலும், ‘உலகத் தொலைக்காட்சியின் முதன்முறை’ படங்களைப் பார்க்காமல் யார் அதை பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. இந்த படம் இன்றைய இளைய மாணவ சமுதாயத்தில் என்ன பாதிப்பும், சுதந்திரத்தைப் பற்றி என்ன அர்த்தம் கொடுக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். “சினிமா படம் பார்ப்பது தவறல்ல, படங்களிலிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், அதை பின்பற்ற வேண்டும்” என்று எனது பள்ளி ஆசிரியர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. இந்த படத்தில் இருந்து இளைய சமுதாயத்தினர் என்ன கற்றுக் கொள்ளப் போகிறார்கள், பின்பற்றக்கூடிய விஷயம் எது??…. அது தான் அன்றைய தினத்தின் கடைசி சிந்தனையாக இருந்தது. கடினமான கேள்வியா என்று தெரியவில்லை, ஏனோ இந்த கேள்விக்கு பதில் கிடைப்பதற்கு முன் தூங்கிவிட்டேன்.

அதிகாலையில் எழுந்துவிட்டேன். அம்மாவுக்கு ஆச்சரியம். முடித் திருத்தகத்துக்கு சென்றேன். நல்ல வேளை, அங்கிருந்த தொலைக்காட்சியில் பிரதமர் கொடியேற்றி முடித்துவிட்டார். முடி வெட்டும் போது கொடியேற்றினால் முடி திருத்தகரைக் கடுப்பேற்றும் விதமாக எழுந்து நிற்பதா, அல்லது ஒரக்கண்ணால் அந்த காட்சியைப் பார்ப்பதா என்ற குழப்பம் இருந்திருக்கும். இப்போது குழப்பமும் இல்லை, அவ்வளவு கூட்டமும் இல்லை. எனக்குப் பிறகு ஒரு சிறுவனும் அவனது தந்தையும் வந்தனர். எனக்கு முடி வெட்டும் வேளை உடனே வந்தது. தொலைக்காட்சியில் சுதந்திர தினத்தின் இராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது.

நெற்றியின் மேல் இருந்த முடியை வெட்ட ஆரம்பித்த போது பாதுகாப்பாகக் கண்களை மூடிக்கொண்டேன். அப்போது அந்த சிறுவன் அவன் தந்தையிடம் சொன்னதைக் கேட்டேன். நான் பார்த்த படம் இளைய சமுதாயத்தின் ஏற்படுத்திய பாதிப்பு புரிந்தது. மங்கல் பாண்டே என்ற சுதந்திர வீரனின் படத்திலிருந்து என்ன பின்பற்றப் போகிறார்கள் என்ற என் நேற்றைய கடைசி கேள்விக்கு பதில் கிடைத்தது. அப்படியே கண்களை திறந்துவிட்டேன். முடி கண்ணில் விழுந்தது. சிறுவன் கூறியதை நினைவு கூர்ந்தேன்.

தந்தை மகனிடம் “எப்படிடா வெட்ட, என்ன மாதிரி கட் வேணும்?” என்றார்.
“படத்துல மங்கல் பாண்டேவோட ஹேர் ஷ்டைல் சூப்பர்பா. அந்த மாதிரி ஹேர் கட் வேணும்பா!” என்றான்.

கலங்கிய கண்களுடன் (ஆம், முடி விழுந்ததனால்) அந்த சிறுவனைப் பார்த்தேன். முடி குறைவாகத்தான் இருந்தது.

-வினோத்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

Monday, August 08, 2005

இணையப் புலவனின் காதல் திணை

பாலை
(மணலும் மணல் சார்ந்த தளமும்)
பாலை கவிஞன் காதல் கொண்டான்….சப்பாத்திக் கள்ளி நெஞ்சினில் ஈரம் காதல்.

நெய்தல்
(கடலும் கடல் சார்ந்த தளமும்)
நெய்தல் கவிஞன் காதல் கொண்டான்... சிப்பி நெஞ்சினில் முத்து காதல்.

முல்லை
(காடும் காடு சார்ந்த தளமும்)
முல்லை கவிஞன் காதல் கொண்டான்… மூங்கில் நெஞ்சினில் மெல்லிசை காதல்.

மருதம்
(வயலும் வயல் சார்ந்த தளமும்)
மருதக் கவிஞன் காதல் கொண்டான்… கடுந்தோல் நெஞ்சினில் கடலை காதல்.

குறிஞ்சி
(மலையும் மலை சார்ந்த தளமும்)
குறிஞ்சி கவிஞன் காதல் கொண்டான்… பாறை நெஞ்சினில் பூ காதல்.

இணையம்
(கணினியும் கணினி சார்ந்த தளமும்)
இணையத் தளத்தின் ஆங்கோர் மூலையில் கணினிக் கவிஞன் காதல் கொண்டான்…
வன்பொருள் நெஞ்சினில் மென்பொருள் காதல்.

-வினோத்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.